உபாகமம் 20 : 1-3 16 பிப்ரவரி 2026, திங்கள்
“கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்.” – எபிரேயர் 13 : 6
நினைவில் வைத்திருக்க வேண்டியதை மறந்து விடுவதும் மறக்க வேண்டியதை நினைவில் வைத்திருப்பதும் மனித பலவீனம். கடந்த கால அனுபவங்களை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். கடவுளின் வாக்குத்தத்தங்களையும் அவர் நம்மை வழிநடத்தின விதங்களையும் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. ஏனெனில் அவை நம்மை எல்லா சூழல்களிலும் மன உறுதியுடன் வாழ உதவி செய்யும்.
குறிப்பாக வாழ்வில் துன்பங்கள் வரும்போது நாம் தடுமாறுகிறோம். கடவுள் இஸ்ரவேல் மக்களிடம் எதிரிகள் படையெடுத்து வந்தபோது அவர்களுக்கு பயப்படாதிருக்கும்படி கூறினார். மேலும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டுவந்த கடவுள் கூடவே இருக்கிறார் என்பதை மறவாதிருக்க அழைக்கிறார்.
இன்று நாம் வியாதி, கடன் பிரச்சினைகள், இயற்கை பேரிடர்கள் போன்றவை வரும்போது தடுமாறுகிறோம். கடவுள் நமக்கு துணையாக இருக்கும்போது எதிராக வரும் அனைத்து சத்துருக்களின் கைக்கும் அவர் நம்மை தப்புவிக்கிறார்.
பல வேளைகளில் நம்மோடு கூடவே இருக்கிற கடவுளின் பிரசன்னத்தை உணர மறந்து விடுகிறோம். இதனால் கடவுளை மறந்து மனிதர்களை நாடிச் செல்லுகிறோம். அச்சத்தினால் கடவுள் ‘அங்கே இருக்கிறார், இங்கே இருக்கிறார்’ எனக் கூறும் மக்களை நம்பி ஏமாந்து விடுகிறோம். அனைத்து வேளைகளிலும் நம்மோடிருக்கும் கடவுளை மறவாமல் அவரிடமே பற்றுதலாயிருப்போம். அவரே நமக்கு சகாயர் என்று உணர்வோம்.
சகாயராகிய கடவுளே! வாழ்வின் சூழ்நிலைகள் மாறினாலும் மாறாத உமது பிரசன்னத்தை உணர்ந்து வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.
