நீதிமொழிகள் 10 : 10-14                                         10 பிப்ரவரி 2026, செவ்வாய்

“பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்குக் கொடுக்க வேண்டும்.” – மத்தேயு 12 : 36

பேச்சு மனிதர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதது. சிந்தனைகளை வெளிப்படுத்தவும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும், உறவுகளை மேம்படுத்தவும் பேச்சு அவசியம்.

பொறுப்பற்ற பேச்சு பல ஆபத்துகளுக்கு வழிவகுக்கும். சமுக ஊடகங்களில் பரவுகின்ற பொறுப்பற்ற பேச்சுகள் பல கலவரங்களுக்கு வழிவகுக்கின்றன. நாம் பொறுப்போடு பேச வேண்டியதன் அவசியத்தை நமதாண்டவர் வலியுறுத்துகிறார். நாம் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைகளுக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை அவர் நினைவுபடுத்துகிறார்.

பொறுப்புள்ள பேச்சுக்கள் வாழ்வளிக்கும் ஊற்றாக விளங்குகின்றன. துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையற்று வாழுபவர்களுக்கு நம்பிக்கையும் அளிக்கின்றன. ஞானமுள்ள பேச்சு அனைவருக்கும் நல் வழியைக் காட்டுகிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் அவருடைய பேச்சைக் கேட்க திரளான மக்கள் கூடினார்கள். இயேசுவின் வார்த்தைகள் மக்களுக்கு வாழ்வளிக்கும் ஊற்றாக இருந்தன. அனேகரை இரட்சிப்புக்கு அழைத்து வந்தன.

இன்று நம்முடைய வார்த்தைகள் உறவுகளை மேம்படுத்த உதவுகின்றனவா என எண்ணிப் பார்ப்போம். கிறிஸ்தவ வாழ்வில் பேச்சுகளின் முக்கியத்துவத்தை பவுலடிகளார் எபேசு சபைக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வரலாகாது’ என்று குறிப்பிட்டார். பக்திவிருத்திக்கேதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே பேசும்படி வலியுறுத்தினார்.

நம்முடைய பேச்சு பொறுப்புள்ளதாக அமையட்டும். பிறருக்கு பயன் தருகிறதாக அமையட்டும். வீண் பேச்சுக்களையும் பிறர் மனதை காயப்படுத்தும் பேச்சுக்களையும் அகற்றுவோம். நாம் பேசும் வார்த்தைகள் கடவுளுக்கு மகிமையாகவும் சக மனிதர்களுக்கு நன்மையாகவும் அமையட்டும்.

வார்த்தையினால் உலகை படைத்த கடவுளே! எங்கள் வார்த்தைகள் பிறருக்கு நன்மை தருவதாக அமைய எங்களுக்கு உதவி செய்தருளும், ஆமேன்.