பிலிப்பியர் 4 : 5                              12 நவம்பர் 2025, புதன்

“உங்கள் பொறுமை எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக.” – பிலிப்பியர் 4 : 5

பொறுமை கடலிலும் பெரியது. பொறுத்தார் பூமி ஆள்வார். பெருமையுள்ளவனை பார்க்கிலும் பொறுமையுள்ளவன் பாக்கியசாலி என பொறுமையின் பெருமையை குறித்து அறியலாம்.

ஆபிரகாமின் வாழ்வை நாம் படிக்கிறோம். கடவுள் அவரை அழைத்த போது வானத்தின் நட்சத்திரங்களை போலவும், கடற்கரை மணலைப் போலவும் உன் சந்ததியை பெரிதாக்குவேன் என வாக்குத்தத்தம் செய்தார். வாக்குத்தத்தம் நிறைவேற 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. 100 வயதை அடைந்த ஆபிரகாம் கடவுளின் வாக்குத்தத்தம் நிறைவேறும் என விசுவாசத்துடன், பொறுமையுடன் காத்து இருந்தார். கடவுளின் வாக்குத்தத்தம் நிறைவேறி ஆபிரகாமின் சந்ததிகளாய் இன்று நாம் வாழுகிறோம்.

மோசே எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்களை அழைத்து வந்த 40 வருடங்களிலும் மிகுந்த பொறுமையுடன் மக்களை வழிநடத்தினார். கடவுளுக்கு விரோதமாக மக்கள் எழும்பிய போதும் பொறுமையாக அவர்களை வழிநடத்தி கானான் தேசத்தை அடையும்படி செய்தார் என பார்க்கிறோம்.

யோபு பொறுமையாய் இருந்து இழந்து போன எல்லாவற்றையும் இரட்டிப்பாய் பெற்று கொண்டார் என வேதத்தில் வாசிக்கிறோம்.
உலக வாழ்வில் பொறுமையாய் இருப்பவர்களை கோழை என்கிறோம். எதையும் சாதிக்க தெரியாதவர் என்கிறோம். உண்மையில் அவர்கள் பொறுமையுள்ளவர்கள், பலவான்கள், வெற்றி வீரர்கள் என நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய குடும்ப வாழ்வில் பொறுமை கடைபிடிப்பது அவசியம். கணவன், மனைவி இடையே பொறுமை இழப்பதால் பிரிவினைகள் குடும்பங்களில் ஏற்படுகிறது. இரவில் இரு பேருந்துகள் நேருக்கு நேராய் சாலையில் வருகிற போது ஒரு பேருந்தின் ஓட்டுநர் தன் முகப்பு விளக்கின் ஒளியை குறைய செய்வதை பார்த்து இருக்கிறோம். அவ்வாறு அவர் செய்யும்போது இருவாகனங்களும் மோதி கொள்ளாமல் சென்று விடுகிறது. அதுபோல வாழ்வில் சில வேளைகளில் பொறுமை மிக அவசியமாகும்.

ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்றார் இயேசு. இளைய மகன் தன் தகப்பனை விட்டு தீய வழிகளில் நடந்து வாழ்ந்த போதும் தந்தை அவனின் வருகைக்காக பொறுமையோடு காத்து இருந்தார்.

கடவுள் நம்மீது எவ்வளவு பொறுமையாக இருக்கிறார் என்பதனை உணர்வோம். கடவுள் நம்மை அழிக்க ஒப்புக் கொடாமல் மனந்திரும்பி அவரிடம் வர வேண்டும் என பொறுமையாக காத்து இருக்கிறார் என்பதனை தினந்தோறும் மனதில் கொள்வோம்.

நமது திருச்சபைகளில் பொறுமை குறைந்த காரணத்தினால் பிரிவினைகள் அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதனை அறிவோம். நாம் பொறுமைக்கு சாட்சியாக வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! நாங்கள் உம்மைப்போல் பொறுமையாக இருக்கவும் அதன்மூலம் நீர் தருகின்ற ஆசீர்வாதங்களை பெறவும் அருள்தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.