2 நாளாகமம் 30 : 20-21                                        11 நவம்பர் 2025, செவ்வாய்

“கர்த்தரின் பிரமாணத்தில் மகிழ்ச்சியாயிருந்து இரவும், பகலும் அவர் பிரமாணத்தை தியானிக்கிற மனுஷனே பாக்கியவான்.”

– சங்கீதம் 1 : 2

சங்கீதம் 1-ல் பாக்கியவான் யார்? என்ற கேள்வியுடன் தொடங்கி கர்த்தரின் பிரமாணத்தை தியானிக்கிற மனுஷனே பாக்கியவான் என்கிறார்.

உலக வாழ்வில் பாக்கியவான் என செல்வம் படைத்தவர்களையும், வசதி படைத்தவர்களையும் கூறுவோம்.

நல்ல உடல் அமைப்பு, சுகம், பெலன், நல்ல வேலை, நல்ல குடும்பம், பிள்ளைகள், வீடு வாசல் உடையவர்களே பாக்கியவான்கள் என்கிறோம். இதுவும் சில வேளைகளில் உண்மையாக இருக்கலாம்.

கர்த்தரின் சித்தப்படி செய்து மகிழ்ச்சி அடைவதும், இரவு பகலும் அவரின் செய்கைகளை நினைவு கூர்ந்து, அதில் வாழ்பவனே பாக்கியவான் என்கிறார்.

மலை பிரசங்கத்தில் இயேசு ஒன்பது குணங்களை கூறி அவர்கள் பாக்கியவான்கள் என்கிறார். ஆவியில் தரித்திரர், துயரப்படுவோர், சாந்தகுணம் உள்ளோர், நீதியின்மேல் பசிதாகம் உள்ளோர், இரக்க குணமுள்ளோர், இருதயத்தில் சுத்தம் உள்ளோர், சமாதானம் பண்ணுவோர், நீதியினிமித்தம் துன்பப்படுவோர், கடவுளின் பெயரால் நிந்தித்து துன்பப்படுகிறவர்கள்.

கடவுளுடன் நாம் வாழும் வாழ்க்கை பாக்கியமுள்ளது, தினமும் வேதம் வாசிப்பது, ஜெபிப்பது, ஆலயத்திற்கு செல்வது, தீமையான காரியங்களை வெறுப்பது, நன்மை செய்து வாழ்வது இவைகள் பாக்கியமுள்ள வாழ்வில் அடையாளங்களாகும்.

கடவுளின் வார்த்தையாகிய இந்த வேதாகமம் நமக்கு எப்படி கிடைத்தது. பல மிஷனரிகள் செய்த தியாகத்தால் என்பதனை அறிவோம். கிறிஸ்தவம் நம் நாட்டில் வந்ததால் ஏற்பட்டுள்ள பாக்கியமான நல் வாழ்வுக்கு நன்றி சொல்வோம்.

சாதி கொடுமைகளால் அடிமைப்பட்ட நமக்கு விடுதலைக் கிடைத்துள்ளது. பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்ட கொடுமைகள் அகன்றுள்ளது. கடவுளை வழிபடும் ஆலயங்கள் கிடைத்துள்ளது. இந்த தேசத்தில் அமைதியான உண்மையான வாழ்வு வாழ சட்டங்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் கிறிஸ்துவத்தின் மூலம் கடவுளை நாம் கண்டு கொள்ள பாக்கியமான வாழ்வு என உணர்ந்து கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.

கர்த்தருடைய வேதம் நம்மை உத்தமனாய், உண்மையுள்ளவர்களாக வாழ வகை செய்யும். மனுஷருக்கு முன்பாக நாம் ஒழுக்கம் நிறைந்தவர்களாய் வாழ்வதன் மூலம் பாக்கிமுள்ள வாழ்வு பெறுவோம்.

இந்த வேத வசனங்கள் கேள்விபடாத மக்களுக்கும் சென்று அடைய நாமும் முயற்சித்து ஜெபிப்போம். அவர்களும் பாக்கியமுள்ள வாழ்வு வாழ கடவுள் துணை புரியட்டும்.

அன்புள்ள கடவுளே! நீர் எங்களுக்கு தந்துள்ள பரிசுத்த வேதாகமத்திற்காக நன்றி சொல்லுகிறோம். தினந்தோறும் நாங்கள் குடும்பமாய் வாசிக்கவும் தியானிக்கவும் ஆவியானவர் துணையை தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.