யோபு 16 : 18-21                                       10 நவம்பர் 2025, திங்கள்

“என்னை மீட்பவர் உயிரோடிருக்கிறார்.” – யோபு 19 : 25

யோபுவின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட வசனமாக இருந்தாலும், இயேசுவை பற்றிய உண்மையான சாட்சியாக காணப்படுகிறது.

கடவுள் உயிரோடு காணப்படுகிறார் என்பதனை உணர்தல் கடினமான காரியமாக உள்ளது. கடவுள் உயிரோடு இருப்பாரானால் ஏன் எனக்கு இவ்வளவு துன்பம், கஷ்டம் என்று சொல்லுகிறோம்.

எவ்வளவு அநியாயங்கள், நாட்டிலும் திருச்சபையிலும் காணப்படுகிறது. கடவுள் உயிரோடு இருப்பாரானால் இது நடக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் சில நேரங்களில் மௌனமாக இருக்க வேண்டியதாக உள்ளது.

யோபு தன்னுடைய இழப்புகளின் மத்தியில் நம்பிக்கையுடன் சொல்கிறார் என்னை மீட்பவர் உயிரோடு இருக்கிறார்.

புனித வெள்ளிக்கிழமை இயேசு மரித்து அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த ஞாயிறு காலையில் நாம் அனைவரும் ஆலயத்தில் கேட்கும் செய்தி உயிரோடு எழுந்தவரை எங்கே தேடுகிறீர்கள்.

அவர் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தியை இந்திய தேசத்திற்கு கொண்டு வந்த மிஷெனரிகளின் தாகத்தை நினைவுகூருவோம்.

நம்முடைய முன்னாள் போதகர்கள் எவ்வளவு கஷ்டத்திலும், வறுமையிலும் ஊழியத்தை செய்ய காரணம் இயேசு உயிரோடு இருக்கிறார் என்ற விசுவாச அடிப்படையில்தான் என்பதனை உணர்வோம்.

ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு கொடுத்தவர், லாசருவை உயிரோடு எழுப்பினவர், உயிரோடு இருக்கிறார்.

அவரின் பிள்ளைகளாய் வாழும் நமது வாழ்வின் மூலம் மீட்பரானவர் உயிரோடு இருக்கிறார், நம் வாழ்க்கையின் மூலம் கடவுள் உயிரோடு இருக்கிறார் என்பதை அறிய செய்வோம்.

நாம் வாழும் குடும்பத்தில், சமூகத்தில், திருச்சபையில் நம்முடைய பொறுமை, தாழ்மை, மன்னிப்பு இவைகளை பிறருக்கு காட்டுவதன் மூலம் இயேசுவானவர் உயிரோடு இருக்கிறார் என்பதனை உணர்த்துவோம்.

நம்மில் வாழும் கிறிஸ்து உயிரோடு வாழ்கிறார் என்பதனை பிறர் அறிய அன்பு, நீதி, நேர்மை, உண்மையுள்ள வாழ்வை வாழ்வோம். அதற்காக அவரின் பிள்ளைகளாய் அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

அன்புள்ள கடவுளே! நீர் உயிரோடு வாழ்கிறபடியால் நாங்களும் வாழ்கிறோம். உமது அன்பை பிறருக்கு காண்பித்து நீர் வாழ்கிறீர் என்பதனை அறிவிக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.