ஆதியாகமம் 1 : 26-27                                             08 நவம்பர் 2025, சனி

“அற்புதமும் ஆச்சரியமுமாய் நான் உண்டாக்கப்பட்டேன்.” – சங்கீதம் 139 : 14

அற்புதமும் ஆச்சரியமுமாய் உண்டாக்கப்பட்டேன். ஆதலால் உமக்கு நன்றி செலுத்துவேன்.

நமது தேசத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கூறுவது சட்ட விரோதம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஏன் என்றால் பெண் குழந்தைகளை கருவில் அழிக்கும் மனசாட்சியற்ற மனிதர்களால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கருவில் உருவாகும் முதல் உறுப்பு இருதயம் என நாம் அறிவோம். நாம் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் வளருகிறோம். என்ன ஆச்சரியம்! தாயின் வயிற்றில் எழும்புகளுடனும், சதையுடனும், தோலுடனும், இருதயம், கண், காது இவைகளுடன் முழு உருவம் பெற்று வளருகிறோம்.

ஆதாம், ஏவாள் இருவரையும் கடவுள் அவரின் சாயலாக உருவாக்கினார் என ஆதியாகமம் புத்தகத்தில் வாசிக்கிறோம். கடவுளின் சாயல் என்பது பரிசுத்தம், நீதி, உண்மை இவைகளாகவே உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதனை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.

எத்தனையோ பேர்கள் கண்பார்வை இல்லாமல் பிறக்கிறார்கள், கை, கால் இல்லாமல் பிறக்கிறார்கள். வாய் பேச முடியாதவர்களாய் பிறக்கிறார்கள். ஆனால் முழு மனிதர்களாக உருவாக்கப்பட்டு கடவுள் அற்புதமாய் நம்மை இவ்வுலகில் வாழ செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டும்.

நமது முதியோர்கள் நமக்கு நல்ல பாடம் கற்று தந்துள்ளார்கள். செருப்பு இல்லை என்று கோபப்படும் போது கால் இல்லாதவர்களை நினைத்து கடவுள் நல்ல கால்களை எனக்கு படைத்ததற்காக நன்றி சொல்ல வேண்டும்.

நமக்கு நேரம் கிடைக்கும் போது கண் பார்வையற்ற இல்லங்களுக்கு சென்று அவர்களின் வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும்.

மனநிலை பாதிக்கப்பட்ட இல்லங்களுக்கு சென்று அவர்களின் துன்பங்களை அறிந்தும், கை, கால்கள் இழந்தவர்கள் உணர்வுகளை அறிந்து அவர்களுக்காக ஜெபிக்கவும், கொடுக்கவும் முன்வருவோம்.

மருத்துவமனைக்கு சென்று குறைகளோடு, நோய்களோடு காணப்படுகிற சக மனிதர்களிடம் உறவாடி வருவோம். ஊழியங்களில் மருத்துவமனை ஊழியம் மிக முக்கிய ஊழியமாக கருத வேண்டும்.

கடவுள் நம்மை ஒவ்வொரு நாளும் சுகமாய் நடத்துவதற்கு நன்றி சொல்ல வேண்டும். குறைகளாய் இவ்வுலகில் வாழ்ந்து வருகிற சக விசுவாசிகள், குடும்பத்தின் அங்கங்கள், நம் சுற்று வட்டத்தில் வாழ்கிறவர்கள், இவர்கள் வாழ்வுக்காக ஜெபித்து, உதவிகரம் நீட்ட அழைக்கப்படுகிறோம்.

வியாதியாக இருந்தேன் பார்க்க வந்தீர்கள் என்ற இயேசுவானவரின் விருப்பத்தை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் முன் வருவோம்.

சுத்த இருதயத்துடன் வாழ்வோம்

அன்புள்ள கடவுளே! எங்களின் சரீர சுகத்திற்காக நன்றி செலுத்துகிறோம். எங்கள் அவயங்கள் உமக்கு பிரியமானதை செய்ய ஆவியானவரின் துணையை தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.