1 சாமுவேல் 7 : 2-4 03 நவம்பர் 2025, திங்கள்
“உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராகத் திருப்பி, அவர் ஒருவரையே சேவியுங்கள்.” – 1 சாமுவேல் 7 : 3
கர்த்தருக்கு ஆராதனை செய்வது, சேவிப்பது, துதிப்பது அனைத்தும் அவரின் பிள்ளைகள் என்பதனை உணரச் செய்யும் காரியங்கள் ஆகும்.
யோசுவா இஸ்ரவேலர் ஜனங்களை நோக்கி கடவுள் எகிப்திலிருந்து நடத்தி வந்த அதிசயமான காரியங்களை கூறினார். வல்லமையுள்ள கடவுளுக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை. அவர் என்றும் வாழ்கின்ற கடவுள் என்பதனை விளக்கிக் கூறினார். இந்த மகா பெரிய கடவுளை நானும் என் வீட்டாரும் சேவிப்போம். நீங்கள் வேண்டுமானால் அந்நிய கடவுளை சேவியுங்கள் என கூறியபோது, இஸ்ரவேலர் ஒரே மனம் படைத்தவர்களாக கடவுளையே சேவிப்போம் என்றார்கள்.
நம்முடைய இருதயம் மகா கேடுள்ளது. கடவுளின் செயல்களையும், அற்புதங்களையும் மறந்து உலக காரியங்களை சிந்திக்கும்.
இஸ்ரவேலர் கடவுளை மறந்தார்கள். அவர்கள் இருதயம் கடவுளை விட்டு அகன்று போயிற்று. இதனால் அடிமைப்படுத்தப்பட்டார்கள். சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ரவேலர் மக்களிடம், நீங்கள் முழு இருதயத்துடன் கடவுளை தேடினால் மட்டுமல்ல, அந்நிய தெய்வங்களை உங்கள் நடுவிலிருந்து அகற்றிவிட வேண்டும். கர்த்தரை மட்டுமே தெய்வமாக கொண்டு அவரை சேவிக்க வேண்டும். அப்பொழுது பெலிஸ்தியர் கையிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் என்றார்.
நியாயப்பிரமாணத்தின் முதல் கட்டளை என்னையன்றி வேறு தெய்வம் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம் என்பதாகும். அதனை கடவுள் மிகவும் வலியுறுத்தி கூறுகிறார். ஏனெனில் அவர் மட்டுமே உலகத்தை படைத்து ஆளும் மெய்யான கடவுளாக இருக்கிறார்.
ஆபிரகாமை கடவுள் அழைத்தபோது உன் இன, ஜன, பந்துக்கள் அனைவரையும்விட்டு வர வேண்டும் என்று மட்டும் சொல்லாமல், நீ வணங்கும் தெய்வங்களையும், விட்டு வரும்படியாக அழைத்தார். ஆபிரகாம் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு கடவுளின் வார்த்தையை விசுவாசித்து வாழ்ந்தார். எனவே விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இன்று நாம் கடவுளுக்கு கொடுக்க வேண்டிய இருதயத்தையும், அவருக்கு கொடுக்க வேண்டிய கனம், மகிமையும் மனிதர்களுக்கு கொடுக்கிறோம். கடவுள் நமக்கு பாராட்டி வருகிற கிருபையை மறந்து குறி சொல்லுகிறவர்களிடமும், மந்திரவாதிகளிடமும் நம்பிக்கை கொண்டு செல்லுகிறோம். இது தவறு என உணர்வோம். நம் முழு இருதயத்துடன் கடவுளின் பிள்ளைகளாய் வாழ்வோம்.
அன்புள்ள கடவுளே! உம்மையே நாங்கள் முழு இருதயத்துடன் ஆராதனை செய்து உம் மகிமையை பிறருக்கு எடுத்துகாட்ட உதவிபுரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
