ஆதியாகமம் 40 : 20-23                             25 அக்டோபர் 2025, சனி

“யோசேப்பை நினையாமல் அவனை மறந்து விட்டான்.” – ஆதியாகமம் 40 : 23

மறதி என்பது எல்லாருக்கும் இருக்கிற குணங்களில் ஒன்று. ஒரு நாளில் ஒரு முறையாவது ஏதேனும் ஒன்றை நாம் மறந்து விடுவோம். சில நேரங்களில் இந்த மறதி மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். நாம் வாசிக்கிற தியானப் பகுதிகூட ஒருவனுடைய மறதியை பற்றியது.

யோசேப்பு உண்மையும் நேர்மையுமான மனிதர். அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்த காலத்தில் அவரோடு அரண்மனைப் பணியாளர்களில் ஒருவரும் சிறையில் இருந்தார். அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவு என்னவெனில் ஒரு திராட்சைச்செடி தனக்கு முன்பாக இருக்கக் கண்டார். அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது அது துளிர்க்கிறதாயிருந்தது. அதில் பூக்கள் மலர்ந்திருந்தது. அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது. அரசனுடய பாத்திரம் அவன் கையிலே இருந்தது. அவர் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளை அரசனுடய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தை அரசர் கையிலே கொடுத்தார். இந்த கனவுக்கு பொருள் என்ன என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தார். யோசேப்பு அந்த கனவுக்கு விளக்கம் கொடுத்தார். மூன்று நாளில் நீ மீண்டும் அரசு வேலை பெறுவாய். நீ அரசருக்கு உணவு பரிமாறுகிற வேலையை பெறுவாய். இப்படி நடக்கும் போது அரசரிடத்தில் தன்னை பற்றி சொல்லி தனக்கு விடுதலை கிடைக்க உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். யோசேப்பு சொன்னது போலவே நடந்தது. ஆனால் அவனோ யோசேப்பை முற்றிலும் மறந்து விட்டான்.

யோசேப்புக்கு மட்டுமல்ல, நம்முடைய வாழ்விலும் இப்படி நடக்கிறது. நம்மிடத்தில் நன்மை பெற்றவர்கள் நம்மை எளிதில் மறந்து விடுவார்கள். நமக்கு மிகுந்த கோபமும், ஆத்திரமும் வரும். இப்படி நம்மை ஏமாற்றி விட்டார்களே. நன்மைப் பெற்றுக் கொண்டு நம்மை மறந்து போனார்களே என்றெல்லாம் புலம்புவோம்.

நம்மை மறவாத கடவுள் இருக்கிறார். தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று சொன்னவர். உள்ளங்கைகளில் நம்மை வரைந்து வைத்திருக்கிறார். நமக்காக தமது சொந்த குமாரனையும் தந்தவர். ஒருபோதும் நம்மை மறக்க மாட்டார்.

நித்திய பிதாவே, எங்களை ஒருபோதும் மறவாமல் காத்து வழிநடத்தும். இயேசுவின் இன்ப நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே, ஆமேன்.