மார்க்கு 10 : 17-22                                            21 அக்டோபர் 2025, செவ்வாய்

“இந்த வார்த்தையை கேட்ட பொழுது துக்கத்தோடு போய்விட்டான்.”– மத்தேயு 19 : 22

இந்த உலகத்தில் வாழ்வதற்கு பணம் தேவை. ஆனால் தற்போது பணத்திற்காக வாழ்க்கை என்ற நிலை வந்துவிட்டது. மனிதர்கள் பணத்திற்காக தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பணத்திற்காக சண்டைகள், கொலைகள் நடக்கிறது. குறுக்கு வழியில் பெரும் பணம் சேர்க்க ஊழல்கள் பெருகிவிட்டது. எதை இழந்தாலும் பணத்தை இழக்க யாரும் தயாராக இல்லை. இந்த நாளுக்குரிய தியானப்பகுதியும் பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஒருவர் இயேசுவைத் தேடி வந்தார். நான் விண்ணுலகம் போக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். இயேசுவோ 10 கட்டளைகள்படி வாழ வேண்டும் என்றார். அவரோ நான் சிறு வயது முதல் பின்பற்றி வருகிறேன் என்று பதிலுரைத்தார். இயேசுவோ ஆனாலும் உன்னிடத்தில் ஒரு குறை உண்டு என்றார். நீ போய் உனக்குரியவைகளை விற்று ஏழைகளுக்கு கொடு என்றார். அவரோ இந்த வார்த்தையைக் கேட்டு துக்கம் அடைந்தார். இயேசுவைவிட்டு போய்விட்டார். அவர் பெரும் செல்வந்தராய் இருந்தார். அவரால் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிய முடியவில்லை. கடவுளைவிட, அவரது வார்த்தையைவிட செல்வமே முக்கியம் என்று முடிவெடுத்தார். இன்றைக்கு அநேகர் அப்படியே இருக்கின்றனர். பணம் பணம் என்று ஓடி கடவுளை மறந்து விடுகின்றனர்.

இதற்கு பொதுவான காரணம் ஒன்று உண்டு. பணத்தை நம்புகிற அளவுக்கு கடவுளை நம்புவதில்லை. பணம் இல்லை என்றாலும் கடவுள் என்னை காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கை இல்லை. இயேசு கூறுகிறார் ஆகாயத்துப் பறவைகளை கவனித்து பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை. களஞ்சியங்களில் சேர்ப்பதும் இல்லை. ஆனாலும் கடவுள் அவைகளின் தேவைகளை தினந்தோறும் சந்திக்கிறார். நீங்கள் அவைகளைக் காட்டிலும் சிறப்பானவர்கள் என்று கூறுகிறார். இதை கடைப்பிடிக்கிற துணிச்சல் நமக்கு தேவை.

நம் வீட்டில் குறைவுகள் இருக்கலாம். தேவைகள் அதிகமாக இருக்கலாம். பணத்தை இழந்திருக்கலாம். வியாபாரத்தில் நட்டமாகியிருக்கலாம். இந்த தருணத்தில் நாம் கிறிஸ்துவை நம்ப வேண்டும். இயேசுவை நம்புவதற்கான சிறந்த தருணம் இதுவே. உறுதியாக நம்பினால் நல்வாழ்வை பெறுவோம்.

வல்லமையுள்ள கடவுளே, உம்மை மாத்திரம் நம்பி வாழ எங்களுக்கு அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.