அப்போஸ்தலர் 11 : 21-26 18 அக்டோபர் 2025, சனி
“….. அற்பப் பிரயாசத்தினாலேயே நீ என்னைக் கிறிஸ்தவனாக்கிவிடலாம் என்றிருக்கிறாய்.” – அப்போஸ்தலர் 26 : 28
மதமாற்றம் என்ற வார்த்தை இந்தியாவிலுள்ள அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. இந்தியாவில் சில மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் நடைமுறையில் உள்ளது. பொதுவாக கிறிஸ்தவர்கள்தான் மதமாற்றம் செய்கிறவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. உண்மையில் கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்வதில்லை. இதைப்பற்றி இந்த நாளுக்குரிய தியானப் பகுதி நமக்குத் தெளிவாக புரிய வைக்கிறது.
பவுல் அடிகளார் பல்வேறு நாடுகளுக்குச் சென்று இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்து வந்தார். யூதர்களோ அவருக்கு விரோதமாக நின்றனர். அவர் மீது பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதனால் பவுல் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அகிரிப்பா என்பவர் முன்பாக நிறுத்தப்பட்டார். அகிரிப்பா தனது தரப்பு நியாங்களை தெரிவிக்க பவுலுக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்போது பவுல் தனது வாழ்வைப் பற்றி பேச துவங்கினார். முதலில் நான் கிறிஸ்தவர்களை மிகவும் துன்பப்படுத்தினேன். தமஸ்குவிலுள்ள கிறிஸ்தவர்களை துன்புறுத்த ஆணை பெற்றேன். அதற்காக தமஸ்கு நோக்கி பயணித்தேன். போகிற வழியில் ஒரு ஒளி என்னை சுற்றிலும் பிரகாசித்தது. அதனால் தடுமாறி விழுந்தேன். அப்போது ‘சவுலே சவுலே’ என்றழைத்து இயேசுவே என்னோடு பேசினார். ‘ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்’ என்று கேட்டார். அப்போதுதான் இயேசுவின் அன்பைப் புரிந்துகொண்டேன் என்று பவுல் விளக்காமாக கூறினார். அகிரிப்பாவோ, அவரை இடைமறித்தார். “நீ என்னை கிறிஸ்தவனாக்கிவிடலாம் என நினைக்கிறாயா?” என்றார். அடித்தாலும் இயேசுவை பற்றி பேசுகிறார்.
இது திட்டமிட்டு நடப்பதில்லை. தன்னெழுச்சியாய் நடப்பது. நாம் சில நேரங்களில், அந்த கடை பிரியாணி அருமை… அந்த துணிக்கடையில் உடைகள் அழகாக உள்ளது… அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகச் சிறப்பு… என்றெல்லாம் கூறுகிறோமே, திட்டமிட்டா கூறுகிறோம். இப்படி சொல்வதால் நமக்கு எந்த நன்மையுமில்லை. ஆனாலும் கூறுவதன் நோக்கம் பிறருக்கும் பயன்படுமே என்பதுதான். அதேபோலதான் கிறிஸ்து இயேசுவில் பெற்ற நன்மையை அறிவிக்கிறோம். இயேசுவின் பாடுகளின் வழியே பெற்ற வாழ்வை அறிவிக்கிறோம். வாழ்வு பெற்றதை அறிவிப்பதில் என்ன தவறு. ஏற்பது ஏற்காததும் அவரவர் விருப்பம்.
கடவுளே, உம்மிடத்தில் பெற்ற நன்மைகளை அறிவித்து வாழ உதவி செய்யும். கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமேன்.
