சங்கீதம் 144 : 12-15 17 அக்டோபர் 2025, வெள்ளி
“எங்கள் குமாரர் விருட்சக் கன்றுகள் போல இளமையில் ஓங்கி வளருவார்கள்.” – சங்கீதம் 144 : 12
பெற்றோர் கடினமாக உழைக்கின்றனர். ஓய்வில்லாமல் ஓடுகின்றனர். வீண் செலவு செய்யாமல் பணத்தை சேகரிக்கின்றனர். தங்கள் மகிழ்ச்சியைப்பற்றி ஒரு நாளும் கவலைப்படுவதில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும். நன்றாய் சாப்பிட வேண்டும். நன்றாய் படிக்க வேண்டும். நல்ல வேலைக்கு போக வேண்டும். நிறைவான வருமானம் பெற வேண்டும். மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே. இந்த நாளுக்குரிய தியானப் பகுதியும் பிள்ளைகளின் வாழ்வு நலமாய் அமைய வழி கூறுகிறது.
இன்றைய தியான வசனம் அப்பொழுது என்று துவங்குகிறது. அதாவது கடவுள் தமது மக்களை விடுதலை செய்யும்போது கிடைக்கும் நன்மைகளை கூறுகிறது. நமது குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் உயரமாய் வளரும் மரங்களைப்போல் இருப்பார்கள். குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகள் அரண்மனை கட்டுவதற்கு நேர்த்தியாய் செதுக்கப்பட்ட தலைக்கல் போலிருப்பார்களாம். இதுதானே ஒவ்வொரு பெற்றோரின் விருப்பம். இந்த விருப்பத்தைப் பெறும் வழி விடுதலை. அந்த விடுதலை இயேசுவில் கிடைக்கிறது. நமக்காக சிலுவையில் தமது உயிரை தந்தவர். அவரில் விசுவாசம் வைப்போம். விசுவாசிக்கிறவர்கள் விடுதலை அடைவார்கள் என்று திருமறை கூறுகிறது.
என் பிள்ளைகள் கீழ்படியவில்லை என்ற கவலையோடிருப்பவர்கள் உண்டு. என் பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வாழ்கிறவர்கள் உண்டு. இயேசுவிடம் வருவோம். அவரில் நம்பிக்கை வைப்போம். அவரே நமது பிள்ளைகளின் வாழ்வை வளமாக்குவார். சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடம் கொடுங்கள். அவர்களை தடை செய்யாதிருங்கள் என்றார். தம்மிடம் வந்த சிறு பிள்ளைகள் ஒவ்வொருவரையும் ஏற்றுக் கொண்டார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கினார். நம்முடைய பிள்ளைகளையும் நேசிக்கிறார். அவர்களுக்கும் ஆசி வழங்குவார், நம்பிக்கையோடிருப்போம்.
அன்பின் கடவுளே, எங்கள் பிள்ளைகளின் வாழ்வை வளமாக்கும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.
