மத்தேயு 10 : 1-8                                            16 அக்டோபர் 2025, வியாழன்

“காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.” – மத்தேயு 10 : 6

காணாமல்போன பிள்ளைகளின் பெற்றோரது தவிப்பை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. குழந்தை எங்கிருக்கிறதோ, என்ன செய்கிறதோ என்று தெரியாமல் வலியோடும் வேதனையோடும் வாழ்கின்றனர். கடவுள் காணமல் போனவர்களைப்பற்றி கவலைப்படுகிறார். அதைப்பற்றிதான் இந்த நாளுக்குரிய தியானப்பகுதி பேசுகிறது.

கர்த்தர் தமது சீடர்களை முதன் முதலாக திருப்பணிக்கு அனுப்பினார். இஸ்ரவேலில் காணாமல் போனவர்களை தேடும்படி அவர்களுக்கு கட்டளையிட்டார். அதாவது, யாரெல்லாம் கர்த்தரை மறந்து வாழ்கிறார்களோ அவர்களைத் தேடி போகக் கட்டளையிட்டார். அவர்களை கூட்டி சேர்ப்பதில் கவனம் செலுத்தினார். தமது அன்பை புரிந்து கொள்ளாமல் பிரிந்து போனவர்களையும் கடவுள் நேசிக்கிறார். பெற்றோரின் அன்பை புரிந்துகொள்ளாத பிள்ளைகள் உண்டு. இதனால் பிரிந்திருக்கிற குடும்பங்களும், உறவுகளும் உண்டு.

நம்மைவிட்டு பிரிந்து சென்றவர்களையும் நேசிப்போம். அவர்களை கூட்டி சேர்க்க முயற்சி செய்வோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மையல்லவா! ஆனால் இது எளிதானதல்ல. நமது அன்பை உதாசீனப்படுத்திப் போனவர்களை நம்மால் ஏற்க முடியாது. நமக்கு துரோகம் செய்து ஓடிப்போனவர்களை நாம் தேடி போகவேண்டிய அவசியம் இல்லைதானே. ஆனால் பாவம் செய்து கடவுளைவிட்டு பிரிந்தவர்கள் நாம். இயேசுவோ சிலுவையில் தம்மை பலியாக தந்து நம்மை சேர்த்துக் கொண்டாரே. அந்த அன்பை நாமும் தரித்துக் கொள்வோம். பிரிந்து போனவர்களை ஏற்றுக் கொள்ள கடவுள் நமக்கு பெலன் தருவார்.

அன்பின் தந்தையே, உமது சிலுவையின் அன்பை தரித்துக்கொண்டு வாழ கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.