நீதிமொழிகள் 25 : 21-23 26 செப்டம்பர் 2025, வெள்ளி
“தீமையினாலே வெல்லப்படாமல், நன்மையினாலே தீமையை வெல்லு.” – ரோமர் 12 : 21
சூரியகாந்தி செடி வளரும்போது அச்செடியை நசுக்கிப்போட களைகள் கூடவே வளருமாம். நசுக்கிப்போட வந்த களையானாலும், சூரியகாந்தி செடி வளர்ந்து அந்த களைக்கு நிழல் தரும். அந்த நிழல் நிமித்தம் சூரிய வெளிச்சம் இல்லாமல் அந்த களைகள் கருகிப் போகுமாம். நன்மையால் தீமையை வென்ற நிலை.
தியானபாகத்தில், பவுல் தீமையை நன்மையால் வெல்லு என்று குறிப்பிடுகிறார். தீமைக்குத் தீமை செய்யாதே. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது கிறிஸ்துவ வாழ்வின் அறம் அல்ல. சத்துருவையும் நேசிப்பதே கிறிஸ்துவ வாழ்வின் அடையாளம். நமதாண்டவர் கற்றுத்தந்த பாடம் அதுவே. அவர் வாழ்ந்து செய்துகாட்டினார். கன்னத்தில் அறைந்து, வாரினால் அடிப்பித்து, தூஷித்து சிலுவையில் அறைந்தனர். பிதாவே இவர்களை மன்னியும் என்று சிலுவையில் கூறினார். இவர் மெய்யாகவே நீதிபரன் என்று நூற்றுக்கதிபதி சாட்சிப் பகர்ந்தார். சிலுவை மரணம் இயேசுவிற்கு தீமையாக யூதர்கள் செய்தனர். ஆனால் அவரின் சிலுவை மரணம் உலக மீட்பிற்குக் காரணமானது. நமது மீட்பிற்கும் காரணமானது.
கடவுளின் பிள்ளைகளாய் இயேசுவில் அழைத்துள்ளார். நன்மை செய்யும்படி அழைக்கப்பட்டுள்ளோம். ஆனால் நமக்குள் எத்தனை வைராக்கியங்கள், பழி வாங்கத் துடிக்கும் உணர்வுகள், அடுத்தவரைக் கெடுக்க நினைக்கும் சூழ்ச்சிகள். இப்படித்தான் வாழ நினைக்கிறார்கள் பலர். பழிவாங்குவது என் காரியம் என்று கடவுள் சொல்லுகிறார்.
பழைய ஏற்பாட்டில் யோசேப்பு என்பவர் தமது சகோதரர்களால் வெறுக்கப்பட்டார், விற்றுப்போடப்பட்டார். கடவுள் அவரை எகிப்தில் உயர்த்தினார். தன் சகோதரர்களைப் பழிவாங்காமல் அவர்களை நிறைவாய் போஷித்தார். நாமும் தீமைக்கு தீமை செய்யாமல் நன்மையினால் தீமையை வெல்லும்படி அன்புகூருவோம். கிறிஸ்துவின் அன்பினால் அவர்களை வெல்ல தூயாவியானவர் துணை செய்வார்.
அன்பின் கடவுளே, சத்துருக்களாய் இருந்த எங்களை உம்முடைய குமாரன் இயேசுவின் பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டதற்க்காக நன்றி செலுத்துகிறோம். நன்மைசெய்து வாழ கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்
