லூக்கா 8 : 22-25 27 செப்டம்பர் 2025, சனி
“என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிச் செய்யும் என்று சத்தமிட்டுக் கேட்டாள்.” – மார்க்கு 9 : 24
ஒரு சிறுபையன் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென்று அலையால் இழுத்துச் செல்லப்பட்டான். உடனே அங்கிருந்த உயிர்காப்பாளர் அச்சிறுவனைக் காப்பாற்றும்படி சென்றார். நம்பிக்கை இல்லாமல் சிறுவன் தள்ளிப்போக, நான் உன்னைக் காப்பாற்ற வந்த உயிர் காப்பாளர் என்று சொன்னபிறகு நம்பிக்கையோடு அச்சிறுவன் அவரைப் பிடித்துக்கொண்டு கரையேறினான்.
தியானபாகத்தில், அசுத்த ஆவிபிடித்த தனது மகனை சுகப்படுத்தும்படி தகப்பன் சீஷரிடம் கொண்டுபோனார். ஆனால் அவர்களால் சுகப்படுத்த முடியவில்லை. நம்பிக்கை இழந்த தகப்பன், ‘உம்மால் ஏதாகிலும் செய்யமுடியுமானால் செய்யும்’ என்று இயேசுவிடம் கேட்கிறார். ‘முடியுமானால் என்றாயோ? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்’ என்று கூறுகிறார். தகப்பன் விசுவாசம் உண்டு. என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்தருளும் என்று வேண்டிக்கொள்ளுகிறார். இயேசு அசுத்தாவியைத் துரத்தி மகனை சுகப்படுத்தினார்.
நாமும் பல நேரங்களில் கடவுளிடம் அவிசுவாசத்துடனே நடந்து கொள்ளுகிறோம். ஒரு தேவைக்காக ஜெபிப்போம். ஜெபித்துவிட்டு சந்தேகத்துடன் அத்தேவைக்கு பதிலை உலகப்பிரகாரமான காரியங்களில் தேட முயற்சிப்போம். அவிசுவாசத்தோடு அல்ல, விசுவாசத்தோடு ஆண்டவரிடம் கேட்க விரும்புகிறார்.
அன்னாள் என்கிற பெண்மணி நம்பிக்கையோடு தனது தேவையை கர்த்தரிடம் கேட்கிறார். கேட்டபின் அவர் துக்கமுகமாய் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கர்த்தர் விண்ணப்பத்தைக் கேட்டார். சாமுவேல் என்ற பிள்ளையைத் தந்தார். விசுவாசி, அப்பொழுது கடவுளின் மகிமையை காண்பாய் என்று ஆண்டவர் நம்மை அழைக்கிறார். விசுவாசமுள்ளவர்களாய் வாழ்வோம். அவிசுவாசத்தை நீக்கிப்போடும் என்று வேண்டிக்கொள்வோம். ஆண்டவரின் அன்பில் நிலைத்து இருப்போம்.
கிருபையுள்ள கடவுளே, உம்முடைய குமாரன் இயேசுவின் வழியாக உம்மில் நம்பிக்கைக்கொண்டு வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
