2 சாமுவேல் 23 : 13-17 30 செப்டம்பர் 2025, செவ்வாய்
“…இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.” – 2 சாமுவேல் 23 : 17
பாலைவனத்தில் மிகவும் சோர்ந்து நாவு வறண்ட நிலையில், தண்ணீர் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த போர் சேவகர்கள். அவர்களில் ஒரு வீரரிடம் மட்டும் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. அந்த வீரர் தன்னிடம் உள்ள தண்ணீரை அருந்தவில்லை. ‘ஏன், நீ தண்ணீர் குடிக்கவில்லை’ என்று கேட்டபோது ‘மற்றவர்களுக்கு இல்லாதது எனக்கும் வேண்டாம்’ என்றார்.
தியானபாகத்தில், தாவீது பெத்லெகேமில் இருந்து தண்ணீர் கொண்டுவரும்படி தனது பராக்கிரமசாலிகளான வீரர்களிடம் கூறினார். உடனே அவர்கள் பெலிஸ்தியர் கட்டுப்பாட்டில் இருந்த பெத்லெகேமுக்குத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தண்ணீர் கொண்டுவந்து தாவீதிடம் கொடுத்தனர். தாவீது அத்தண்ணீரைப் பருகாமல், ‘‘உயிரைப் பணயம் வைத்து கொண்டுவந்தார்கள். அதை நான் குடித்தால் அவர்கள் இரத்தத்தைக் குடிப்பதற்கு சமம். இது விலைமதிக்கமுடியாத ஒன்று. எனவே, இந்த தண்ணீரை கர்த்தருக்கு ஊற்றிவிடுவேன்’’ என்று ஊற்றிவிட்டார்.
கடவுள் தமது குமாரன் இயேசுவின் உயிரை பணயமாக மனுக்குலத்தின் மீட்பிற்கு அனுப்பினார். கடவுள் நம்மை பொன்னினாலும் அல்ல, வெள்ளினாலும் அல்ல, விலையேறப்பட்ட இரத்தத்தினால் நம்மை மீட்டுக்கொண்டார். ஒரே சரீரத்தின் மாம்சத்தையும், இரத்தத்தையும் பெற்றுக்கொள்வதினால் பாவமன்னிப்பின் வாழ்வை நாம் பெற்றுக் கொள்கிறோம். இயேசுவின் இரத்தத்தினால் புது வாழ்வு பெற்று உள்ளோம். நமது இரட்சிப்பு விலைமதிக்கமுடியாதது. எபிரேயர் நிருப ஆசிரியர் நமக்கு உறுதியாக்கப்பட்ட இவ்வளவு பெரிதான இரட்சிப்பைப் பற்றி கவலை அற்றிருப்போமானால் நாம் எப்படி தப்பித்துக் கொள்வோம் என்று இரட்ச்சிப்பின் மேன்மையை குறிப்பிடுகிறார்.
நாம் உலகப்பிரகாரமான காரியங்களுக்காக கவலைகொள்கிறோம். உலகமுழுவதும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் லாபம் என்ன? என்று ஆண்டவர் கேட்கிறார். தன் வாழ்வை நமக்காய் சாப சிலுவை ஏற்றுக்கொண்டு தமது மரணத்தினால் மேலான வாழ்வை நமக்குத் தந்துள்ளார். விலைமதிக்கமுடியாத வாழ்வில் நிலைத்து வாழ கடவுள் உதவி செய்வார்.
அன்பின் கடவுளே, உமது குமாரனில் நீர் தந்த இரட்சிப்பின் வாழ்வில் நிலைத்து வாழ கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
