1 கொரிந்தியர் 3 : 16-17                      24 செப்டம்பர் 2025, புதன்

“நாங்கள் கடவுளின் உடன் ஊழியர், நீங்கள் கடவுளின் பண்ணை, கடவுளின் கட்டடம்.” – 1 கொரிந்தியர் 3 : 9

அரிசி உணவை நாம் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறோம். அரிசியாக வருவதற்கு முன் எத்தனை நிலையைக் கடந்து வருகிறது. எத்தனை விதமான பணிகள், பணியாள்கள். பலன்தரக்கூடியதாக வர எத்தனை பணிகள்.

தியானபாகத்தில், பவுல் தான் கடவுளின் பணியாள் என்றும், கொரிந்து திருச்சபையை கடவுளின் பண்ணை என்றும் குறிப்பிடுகிறார். வசன விதையை விதைத்து ஒருவரை ஆண்டவருக்குள்ளும், விசுவாசத்திற்குள்ளும் வழிநடத்துவது, கிறிஸ்துவின் பூரண வளர்ச்சிக்கு பரிசுத்தவான்களைப் பக்குவப்படுத்தும்படி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பணியாள்தான் ஊழியக்காரர் என்று தன்னையே பவுல் குறிப்பிடுகிறார்.

திருச்சபை கடவுளின் பண்ணையாக, கனிகொடுக்கக்கூடியதாக இருக்க கடவுள் அனுமதித்திருக்கிறார். கடவுள் நம்மை தமது குமாரன் இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வழியாக முழு மனுகுலத்தையும் மீட்டுக்கொண்டார். அவருடைய வார்த்தையைக் கேட்டு இயேசுவில் விசுவாசம் வைப்பவர்களை கடவுளின் பண்ணையாக – திருச்சபையாக உருவாக்குகிறார்.

ஆண்டவர் திருச்சபையாக கனிகொடுத்து வாழ அழைத்திருக்கிறார். ஆண்டவர் இயேசு ஓர் அத்திமர உவமையைக் கூறி கனி கொடுப்பதின் அவசியத்தை லூக்கா நற்செய்தியில் 13ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். ஆவியானவர் கடவுள் வார்த்தையினாலும் சாக்கிரமெந்திலும் நம்மை சுத்தப்படுத்தி கனிகொடுக்கக்கூடியவர்களாக வழிநடத்துகிறார்.

இன்று நாம் கடவுளின் பண்ணை. இயேசு எனும் ஜீவகாரத்தை மற்றவர்களுக்குத் தரக்கூடிய பண்ணையாக இருக்கிறோம். அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயாளம், நற்குணம், உண்மை, சாந்தம், இச்சையடக்கம் என்கிற ஆவியின் கனிகளைக் கொடுக்கவேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார். இக்கனிகளில் இயேசு வெளிப்படுகிறார். இயேசுவானவரை வெளிப்படுத்தும் பண்ணைகளாய் வாழ தூயாவியானவர் நமக்குத் துணைசெய்வார்.

சகல சிருஷ்டிக்கும் காரணராகிய கடவுளே, உமது குமாரன் இயேசுவில் எங்களை உமது பண்ணையாக ஏற்றுக்கொண்டதற்கு தோத்திரம் செலுத்துகிறோம். உமது பண்ணைகளாகக் கனிகொடுத்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.