தரிசனம் 2 : 1-7                           25 செப்டம்பர் 2025, வியாழன்

“நீ அநேக காரியங்களைப்பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய், தேவையானது கொஞ்சமே, தேவையானது ஒன்றே…”
– லூக்கா 10 : 41, 42

உளவியல் நிபுணர்கள் ஒரு மனிதனின் கவலையில் தேவையற்ற, அவசியமற்ற கவலைகள்தான் ஏராளம் என்று குறிப்பிடுகிறார்கள்.

தியானபாகத்தில், இயேசு ஆண்டவர் பெத்தானியா என்ற கிராமத்தில் உள்ள மார்த்தாள்-மரியாள் வீட்டிற்குச் செல்கிறார். மார்த்தாள் பரபரப்பாக ஆண்டவருக்கு பணிவிடை செய்வதில் இருக்கிறார். மரியாளோ இயேசுவின் பாதத்தண்டை உட்கார்ந்து ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார். மார்த்தாள், ‘நான் தனியாக வேலை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறது உமக்கு கவலையில்லையா’ என்று ஆண்டவரைப் பார்த்து கேட்கிறார்.

அப்பொழுது ஆண்டவர் அநேக காரியங்களைக் குறித்து கவலைப் படுகிறாய் என்று மார்த்தாளிடம் கூறுகிறார். பணிவிடை செய்வது அவசியம்தான். அதைக்காட்டிலும் மேலானது கடவுளின் வார்த்தையைக் கேட்பதாகும்.

நாம் நமது தேவைகளுக்காய் கவலைப்படுகிறோம் என்றால், கடவுளின்மேல் அவரின் வார்த்தையின்மேல் நம்பிக்கையற்றவர்கள் என்று அர்த்தம். இயேசுவில் நாம் அவருடைய பிள்ளைகள். நாம் கடவுளின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். நம்முடைய தேவைகளை சந்திக்க அவர் எப்பொழுதும் ஆயத்தமாக உள்ளார். நாம் அவரில் அன்புகூர்ந்து அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழ அர்ப்பணிப்போம்.
கவலைப்படுவதினால் ஒருவன் தன் சரீரத்தில் ஒரு முழத்தைக் கூட்ட முடியாது என்று ஆண்டவர் தமது மலைப்பிரசங்கத்தில் குறிப்பிடுகிறார். கவலை கடவுளின்மேல் நாம் கொண்ட அன்பு குறைவதின் வெளிப்பாடு. உலகப் பிரகாரமான கவலைகள் கடவுளின் அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கிறது. எபேசு திருச்சபை இவ்விதமாகத்தான் உலகப் பிரகாரமான கவலையினால் கடவுளின் அன்பைவிட்டு விலகினார்கள். ஆவியானவர் மனம்திரும்பிவர ஓர் அழைப்புக் கொடுக்கிறார். இன்று நம்மையும் கவலைகளைவிட்டு மனம்திரும்பி வாழ அழைக்கிறார். கடவுளின் வார்த்தையில் நம்பிக்கைக்கொள்வோம். அவரில் அன்புகூருவோம்.

அன்பின் கடவுளே, நாங்கள் அநேக காரியங்களைக் குறித்து கவலைப்படாமல் இயேசுவில் அன்புகூர்ந்து உம்முடைய வார்த்தைகளில் விசுவாசம் வைத்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.