ஆமோஸ் 3 : 1-8 02 ஜூலை 2025, புதன்
“கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார்.” – ஆமோஸ் 3 : 8
கடவுளால் படைக்கப்பட்ட மனுக்குலம் அவர் வகுத்துக் கொடுத்த வழிகளை விட்டுவிட்டதால் கடவுளை விட்டுப் பிரிந்தது. அன்பு நிறைந்த கடவுள் மனுக்குலத்தை மீட்டு தன்னோடு சேர்த்துக்கொள்ள மீட்பின் திட்டத்தை வகுத்தார். ஒரு மேசியாவை வாக்களித்தார். மேசியா பிறக்க ஒரு நாடு, ஒரு சமூகம், ஒரு கோத்திரம், ஒரு குடும்பம், ஒர் ஊர் என எல்லாவற்றையும் செம்மையாய் செய்து முடித்தார்.
கடவுள் ஆபிரகாமில் ஒரு சமூகத்தையும் உருவாக்கினார். இவர்கள் இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் மட்டுமல்ல, இவர்கள் வழியாக முழு உலகமும் இரட்சிக்கப்பட கடவுள் தீர்மானித்தார். ஆனால் இந்த மக்கள் தங்கள் அழைப்பின் நோக்கத்தை மறந்து வாழ்ந்தார்கள். கடவுளின் திட்டத்தையும் நோக்கத்தையும் மறந்துபோன மக்களை ஆமோஸ் தீர்க்கர் கண்ணுற்றார். அவர் மக்களை எச்சரித்துச் சொன்ன வார்த்தைகளே நமது தியானப்பகுதி.
ஆமோஸ் காலத்தில் தீர்க்கதரிசனம் பாரம்பரியத்தின் அடித்தளத்தில் அமைந்திருந்தது. ஆமோஸ் தீர்க்கதரிசியுமில்லை, தீர்க்கதரிசன சங்கத்தைச் சேர்ந்தவருமில்லை. இவர் அத்திமர தோப்பு காவல் காக்கிறவர். தமது அழைப்பின் நோக்கத்தை மறந்த மக்களுக்கு அதை நினைவுபடுத்தி அவரிடம் திருப்பி அழைக்க கடவுள் ஆமோஸை தெரிந்தெடுத்து அனுப்பினார்.
கடவுளுக்கும் இஸ்ரவேலருக்கும் தகப்பன் பிள்ளை உறவின் உண்மைத் தன்மையை விளக்குகிறார். கடவுளால் தெரிந்தெடுக்கப்படுதல் என்பது பாவம் செய்வதற்கான அனுமதிச் சீட்டு அல்ல. மாறாக கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுதற்குரிய பெரும் பொறுப்பாகும்.
கடவுள் பேசாமல் தீர்க்கர்கள் பேச முடியாது. கடவுள் பேசினால் தீர்க்கர்கள் பேசாதிருக்க முடியாது. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசன வரலாற்றில் ஒரு புதிய யுகத்தினை இது எடுத்துக் காட்டுகிறது.
அன்பானவர்களே! கடவுள் இயேசுவில் நம்மை கிருபையாக தெரிந்தெடுத் திருக்கிறார். அவர் பிள்ளைகளாக வாழ்வித்து வருகிறார். நாம் நம் தெரிந்தெடுப்பின் நோக்கத்தை கண்டு கொள்ள வேண்டும். அதை வாழ்வில் செயல்படுத்த பாடுபட வேண்டும். தூய ஆவியானவர் நாம் செயல்பட உதவி செய்கிறார். அழைப்பின் நோக்கத்தை புரிந்து கொள்ளுவோம். அவருக்கென்று வாழுவோம்.
எங்களை கிருபையாய் அழைத்திருக்கிற கடவுளே! அழைப்பின் நோக்கத்தை அறிந்து வாழ அருள்புரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
