யோவான் 16 : 12-15                         27 ஜூன் 2025, வெள்ளி 

“கடவுள் தனக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி.” – அப்போஸ்தலர் 5 : 32

இவ்வுலகில் நான் அனாதை தனித்தவன் என்று கூறுகிறவர்களுக்கு திருமறை தருகின்ற பதில், இவ்வுலகில் யாரும்  தனித்தவர் அல்ல, யாவரையும் படைத்த கடவுள் துணையாய் இருக்கிறார். அவர் தேற்றரவாளனாய் தேற்றுகிறார். நான் உங்களை திக்கற்றவர்களாய் விடுவதில்லை என்று கூறுகிறார். பலர் இதை உணர்ந்து கொள்வதில்லை. சிலர் மட்டுமே இதை உணர்ந்து கொள்கிறார்கள். தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்.

இன்றைய தியானப் பகுதியும் இதைத்தான் நமக்கு தெளிவுபடுத்துகிறது. கிறிஸ்து நமக்காய் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார். மனம் திரும்புதலும் பாவ மன்னிப்பும் அவரால் உண்டாகும்படி இரட்சகராய் உயர்த்தப்பட்டிருக்கிறார். இதற்கு பரிசுத்த ஆவியும் சாட்சி என்று கூறுகிறார். கர்த்தர் யாவருக்காகவும் உயர்த்தப்பட்டிருக்கிறார், யாவருக்கும் துணையாய் இருக்கிறார். தம்மை நம்புகிற யாவருக்கும் தூய ஆவியை தந்தருளுகிறார். அவரே நமது தேற்றரவாளன். பரிசுத்த ஆவியானவர் நம்மை பரிசுத்தப்படுத்துகிறார். விசுவாசத்தில் நிலை நிற்க உதவி செய்கிறார். வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். சத்தியத்தை போதித்து நம்மை வழிநடத்துவார். அறியாமை இருளில் இருக்கிற யாவருக்கும் இயேசுவில் மீட்பு அருளுவார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவனாய், பட்ட மரமாய், சபையில் நுழைய முடியாத அண்ணகனிடத்திலும் ஆண்டவர் தமது பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதை பார்க்கிறோம். வேதத்தை வாசித்தும் அதன் விளக்கங்களை அறியாதிருந்த அந்த மனிதனிடம் ஆண்டவர் பிலிப்புவை ஆவியானவரைக் கொண்டு அனுப்புகிறார். அவர் இறை வார்த்தையை ஏற்றுக் கொண்டு, மனம் திரும்பி திருமுழுக்கு பெற்றுக் கொண்டார். பரிசுத்த ஆவியானவர் யாவரையும் பரிசுத்தமாக்குகிறார், வசனத்தை கொண்டு விசுவாசத்தை உருவாக்குகிறார்.

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பலமடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி வரை எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார். ஆண்டவர் பரிசுத்த ஆவியானவரை கொண்டு நம்மை பலப்படுத்தி தமக்கு உகந்த மக்களாய் வாழ வழி காட்டுகிறார். நாம் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக பெற்றுக் கொண்ட பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாதீர்கள் என்று ஆண்டவர் கூறுகிறார். நாம் ஆவியானவரால் நிறையப் பெற்று நித்திய வாழ்வின் நிச்சயத்தோடு வாழ்வோம்.

கடவுளே! தூய ஆவியானவரை எங்களுக்கு தந்து எங்களை தேற்றி வழிநடத்துகிறீர் நன்றி. தூய ஆவியைப் பெற்றுக்கொண்டு ஆவியின் கனிகளை கொடுத்து வாழ உதவி புரியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.