ஆதியாகமம் 15 : 1 – 2                                  01 ஜனவரி 2025, புதன்

“என்னை ஆட்கொண்டவராகிய கர்த்தாவே, அடியேனுக்கு நீர் தரக்கூடியதென்ன?.” – ஆதியாகமம் 15 : 2

தியானமலர் வாசகர்கள் அனைவருக்கும் வான்மலர் நிலையத்தாரின் மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நம் உள்ளங்களில் ஏக்கமும் எதிர்பார்ப்புகளும் எழுகின்றன. இந்த ஆண்டு எப்படி இருக்கும், எவை சம்பவிக்கும் போன்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன.

நமது தியானவாக்கியப் பகுதியில் ஆபிரகாம் இத்தகைய கேள்வியையே கடவுளிடம் கேட்டார். மேசியாவை பிறக்கச் செய்ய ஒரு நாடு தேவைப்பட்டது. அந்த நாட்டைக் கண்டுபிடிக்க கடவுள் ஆபிரகாமை அழைத்தார். நான் காண்பிக்கிற நாட்டுக்குப் போ என்றார். ஆபிரகாம் நம்பிக்கையோடு கடவுள் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து போனார். ஒவ்வொரு நாளையும் ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் எதிர்பார்த்து நடந்தார். கானான் நாட்டை வந்தடைந்தபோது இந்த நாடுதான் என்றார். ஆபிரகாம் அங்கு கடவுளைத் தொழுது கொண்டார்.

இந்நிலையில் கடவுள் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி இந்த நாட்டை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன் என்றார். அத்துடன் உன்னைப் பெரிய சமூகமாக்குவேன் என்றார். இதுமட்டுமல்ல உன்னை ஆசீர்வதித்து உன் பெயரை மேன்மைப்படுத்துவேன் என்றார்.

ஆபிரகாமுக்கு அருளப்பட்ட வாக்குத்தத்தங்களும் ஆசீர்வாதங்களும் மகப்பேற்றிற்கான வாக்குத் தத்தத்தால் உறுதிப்படுத்தப்படுகின்றன. குழந்தையற்ற ஆபிரகாமுக்கு கடவுள் திருக்காட்சியருளுகிறார். மகப்பேற்றினை வாக்களித்து ஆபிரகாமை தேற்றுகிறார்.

மனித இயல்பின்படி இவ்வாக்குத்தத்தத்தை நம்ப ஆதாரமில்லை. எனினும் கடவுளிடம் ஆபிரகாமுக்கு இருந்த அனுபவமும் அவை நிறைவேறிய விதமும் நம்பினார். கடவுள் அளிக்கும் இந்த உடன்படிக்கையில் பிள்ளைப்பேறும் சுதந்திரக் கானானும் வாக்களிக்கப்படுகின்றன.

அன்பானவர்களே! மக்களை கடவுள் ஆட்கொள்ளுகிறார் என்பது ஆழ்ந்த சமய அனுபவம். ஆட்கொள்ளப்படுகிற நாம் ஆட்கொண்டவருக்கு எந்நிலையிலும் கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறோம். நம்மைப்போல இவ்வுலகில் வாழ்ந்த என்னைப் பின்பற்றி வா என்றார் ஆண்டவர். அவர் கரங்களைப் பற்றிக்கொண்டு அவர் அடிச்சுவட்டை பின்பற்றி வாழ்வோம். கடவுள் நம்முன்னே இருக்கிற 365 நாட்களும் நம்மை பத்திரமாக நடத்துவார்.

Happy and blessed New Year!

வாக்குத்தத்தங்களை அருளி அவற்றை நிறைவேற்றுகிற கடவுளே! உம் வாக்குத்தத்தத்தை நம்பி வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.