சங்கீதம் 102 : 20-28                             06 செப்டெம்பர் 2024, வெள்ளி

“நாசகரமான குழியிலும், உளையான சேற்றிலுமிருந்து அவர் என்னைத் தூக்கியெடுத்தார்… கால்களை உறுதிப்படுத்தினார்.” – சங்கீதம் 40 : 2

நமது தேவைக்காகப் பலரை அணுகுகிறோம். காரியம் முடிந்ததும், அவர்களை மறந்துவிடுகிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுளை மறந்து போவதில் ஆச்சரியமில்லை.

தாவீதின் பாடலாகத் தியான வசனம் வருகிறது. தாவீது ஆடுகள் மேய்த்து வந்தவன். பல ஆபத்துக்களில், உளை சேற்றில், படுகுழியில் அழிந்துவிடாமல் அவனைக் காப்பாற்றியவர் கடவுள் என்று நம்பினான். சிங்கத்தை வெல்லும் வீரமும், கோலியாத் எனும் அரக்கனை வீழ்த்தும் சமயோசிதமும், ஆண்டவன் அவனுக்குத் தந்த அருட்கொடைகள் என்பதை நினைத்துப் பார்க்கிறான். தன்னுடைய பாவ நிலையையும் தாவீது மறக்கவில்லை. விபச்சாரம், கொலை, வஞ்சகம், பெருமை ஆகிய பாவச்சேற்றுக்குள் புதைந்து கிடந்தேன்… மனம் வருந்திக் கடவுளின் மன்னிப்பை வேண்டினபொழுது கடவுளின் கரம், என்னைத் தூக்கி எடுத்ததே, அழிவுக்குரியவனாகிய என்னை, கடவுள் மன்னித்து அரவணைத்துக் கொண்டாரே… என நினைத்துப் பார்க்கிறான் தாவீது.

அன்பானவர்களே, வாழ்வில் துன்பங்கள் நமக்கு உண்டு. நாம் பாவங்களைச் செய்கிறவர்கள்தான். ஆகையினால் கர்த்தரின் அரவணைப்பு நமக்கு கண்டிப்பாகத் தேவை. தினமும் கடவுளின் மன்னிப்பு நமக்குத் தேவைதானே… இயேசு கிறிஸ்துவின் வழியாக, கடவுள் நம்மை மன்னிக்கிறார். இந்த மன்னிப்பை நாம் மதிக்கிறவர்களானால் கடவுளுக்கு நன்றி செலுத்துவதில் நாம் கருத்தாயிருப்போமே! நமது இழிநிலைகளை, இன்றைக்கும் கடவுள் நமக்கு எடுத்துரைக்கிறார், சுட்டிக்காட்டுகிறார். நம் மனதைக் கடவுள் தம்மிடம் திருப்ப நினைக்கிறார்.

திரும்பி, கடவுளைப் பாருங்கள். பாவங்களை மறக்க மனம் கொள்ளுங்கள். கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார் என்று நம்புங்கள். நம் மனந்திரும்பிய வாழ்வைக் கடவுள் உறுதிப்படுத்துகிறார் என்பது நிச்சயம்.

மன்னிக்கும் இறைவனே, உமது மன்னிக்கும் மாண்பை உணரவும், மனந்திரும்பவும், நன்றியுடன் வாழவும் அருள்புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.