பிலிப்பியர் 1 : 27-30 25 மார்ச் 2024, திங்கள்
“கிறிஸ்துவில் விசுவாசம்வைக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தம் பாடுபடுவதற்கும் நீங்கள் அருள் பெற்றீர்கள்.” – பிலிப்பியர் 1 : 29
ஒரு ஊருக்கு ஒரு ஞானி வந்திருந்தார். ஒரு இளைஞன் அவரை தேடி வந்து தயங்கித் தயங்கி நின்றான். அந்த ஞானி அவனை அழைத்து உனக்கு என்ன வேண்டும் என்றார். அவனோ ஐயா, என் வீட்டில் நிம்மதியே இல்லை, தினந்தோறும் சண்டை, இந்த நிலை மாறி என் வீட்டில் அமைதியும் சமாதானமும் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்றான். உடனே ஞானி நீ ஊருக்குள் போய் சந்தோஷமாய் யாராவது இருந்தால் அவர்களிடம் ஆலோசனை கேட்டு நாளைக்கு வா என்றார். அவனும் அடுத்த நாள் வந்தான். ‘யாரும் சந்தோஷமாக இல்லை. என்னைவிட பல பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கிறது. யாரெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்தேனோ அவர்களெல்லாம் என்னைவிட பல மடங்கு பிரச்சனைகளோடிருக்கிறார்கள். எனவே நீங்களே எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்’ என்றான். அதற்கு ஞானி மெதுவாக, ‘அது தெரிஞ்சா நான் ஏண்டா இப்படி ஊர் ஊரா திரிய போறேன்’ என்றாராம்.
அன்பானவர்களே துன்பம் இல்லாத வீடுகளே இல்லை. ஆனால் அந்த துன்பம் எதனால் வந்தது என்பது முக்கியம். பல துன்பங்களுக்கு நாமே காரணமாயிருக்கிறோம். தேவைக்கு மிஞ்சி செலவு செய்து, கடன் வாங்குவது. தீய பழக்க வழக்கங்களுக்குள்ளாகி வாழ்வை கெடுத்துக் கொள்வது. சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டி விபத்துக்களில் சிக்குவது. இதெல்லாம் நாம் செய்யும் தவறுகளால் விளையும் துன்பங்கள். இப்படி இன்னும் பல. ஆனால் நாமோ கடவுள் என்னை சோதிக்கிறார் என்று புலம்புவோம். ஏன்தான் இப்படி கடவுள் எங்கள் வாழ்வில் துன்பங்களை அனுமதிக்கிறாரோ தெரியவில்லை என்று கடவுள் மீது பழி போடுவோம்.
பிலிப்பியருக்கான இந்த நிரூபத்தை பவுல் சிறையிலிருந்து எழுதினார். பவுலின் இந்த நிலைக்கு காரணமென்ன? அவர் என்ன தவறு செய்தார்? அவர் எந்த தவறும் செய்யவில்லை. மாறாக கிறிஸ்துவின் அன்பை உலகெங்கும் சென்று அறிவித்தார். அடிமைத்தன வாழ்விலிருந்த மக்களுக்கு விடுதலையின் வாழ்வை அறிவித்தார். இதற்காகவே சிறையிலடைக்கப்பட்டார். இதுதான் கடவுளின் நிமித்தமாய் பாடனுபவிப்பது. இதையே பவுல் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார். கிறிஸ்துவை விசுவாசித்து அவரது அருளாசிகளை அனுபவிக்கிற நாம், அதை பிறருக்கும் அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அதனால் வரும் பாடுகளை ஏற்றுக்கொள்ள பவுல் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.
அன்பானவர்களே கிறிஸ்துவின் சிலுவை அன்பை அறிவிப்பது நமக்குக் கிடைத்த பாக்கியம். அது இறைவனின் அருள். அதை சந்தோஷமாய் எண்ணி அறிவிப்போம்.
அன்பின் பிதாவே! உமது அன்பை அறிவிக்கும் அருளை பெற்ற நாங்கள் அதற்கான பாடுகளை சகிக்க பெலன் தாரும். இயேசுவின் பெயரில் ஆமேன்.