ஏசாயா 53 : 1-3 13 பிப்ரவரி 2024, செவ்வாய்
“யூதருடைய ராஜாவே, வாழ்க.” – மத்தேயு 27 : 29
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அரசன் என்ற பதம் ஒரு முக்கியமான பதமாக பார்க்கப்பட்டது. பல தீர்க்கதரிசிகள் கடவுள்தான் இஸ்ரவேலின் ஒரே அரசர் என்று சொன்னார்கள். ‘ஒரு புதிய அரசரை அனுப்புவேன், அவர் உங்களுக்குச் சமாதானத்தையும் மீட்பையும் கொண்டுவருவார்’ என்று தீர்க்கதரிசியின் வழியாக வாக்குக்கொடுத்தார் கடவுள். அவருக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கினர். அவரே நம் இரட்சகரான இயேசுகிறிஸ்து.
ஆனால் நம் தியானவரியில் இயேசுகிறிஸ்துவை யூதரின் ராஜா என்று ஏளனமாக அழைக்கின்றனர் ரோமப் படைவீரர்கள்.
ரோமப் படைவீரர்கள் கிறிஸ்துவை ஒரு அரசரைப் போல சித்தரித்து பரிகாசம் பண்ணுகிறார்கள். அரசருக்கு கிரீடம் இருக்கும், இயேசுவுக்கோ முள்முடி பின்னி தலையின் மேல் வைக்கிறார்கள். அரசரின் கையில் செங்கோல் இருக்கும். அது மரியாதைக்கும் அதிகாரத்திற்கும் அடையாளம். இயேசு கிறிஸ்துவையோ பரிகாசம் பண்ண சாதாரண கோலை கையில் கொடுக்கிறார்கள். அரசருக்கு முன்பாக முழங்கால் படியிடுவது போல முழங்கால் படியிட்டு கேலி செய்கிறார்கள். அரசரை வாழ்த்துவது போல ‘யூதருடைய ராஜாவே வாழ்க’ என்று கூறி ஏளனம் செய்கிறார்கள். அரசரின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவருடைய கரத்தை முத்தமிடுவது வழக்கம். இங்கேயோ அவரை அவமானம் பண்ணும் விதமாக முகத்திலே துப்புகிறார்கள்.
‘நீ யூதருடைய ராஜாவா?’ என்று பிலாத்து கேட்டபோது அமைதியாய் நிற்கின்றார் இயேசு கிறிஸ்து. ‘யூதருடைய ராஜா வாழ்க’ என்று படைவீரர்கள் ஏளனம் செய்த போதும் அமைதியாய் நிற்கின்றார் இயேசு கிறிஸ்து. ‘நீர் உமது ராஜ்ஜியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்’ என்று கள்வன் சொன்னவுடன், தன்னுடைய அரசாட்சியை அவனிடம் ஆமோதிக்கிறார்.
இயேசு கிறிஸ்து யாருடைய அரசர் என்பதல்ல கேள்வி. நாம் அவரை அரசராக காண்கிறோமா? இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தன்னையே வல்லவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் நாம் வலுவற்ற நிலையில் சிலுவையில் தொங்கும் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வல்லமையைக் காண்போம். அவர் நம்முடைய அரசர். ஒரே அரசர். அவரின் ஆளுகைக்கு உட்படுவோம். அவருடனேகூட வாழ்கிற பாக்கியத்தை அவர் நமக்குத் தருவார்.
இறைவா! எங்களை முழுமையாக உம் ஒரேபேறான குமாரனின் ஆளுகைக்குள் ஒப்படைக்க எங்களுக்கு கற்றுத் தாரும். இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமேன்.