ஏசாயா 54 : 11 07 பிப்ரவரி 2023, செவ்வாய்
“அழாதே என்று சொல்லி… பாடையைத் தொட்டார்.” – லூக்கா 7 : 14
நாயீன் என்னும் ஊரிலே விதவையான ஒரு தாய், அவளுக்கு ஒரு ஆண் மகன்இருந்தார். திடீரென அந்த மகனும் இறந்து போனார். இறந்தவரைப் பாடையிலே சுமந்து கொண்டு போனார்கள் ஊர் மக்கள். அந்தத் தாயோ அழுது கதறிய நிலையில் வருகிறார். நம் ஆண்டவர் இயேசு அந்நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்து மனம் உருகினார். அந்த அம்மாவைப் பார்த்து அழாதே என்று கூறினார். பின்பு பாடையைத் தொட்டார். ‘வாலிபனே எழுந்திரு’ என்று சொன்னார். மரித்துப் போன வாலிபர் உயிரோடு எழுந்தார்.
இன்றைக்கு உள்ளம் உடைந்த நிலையில் இருக்கும் நமக்கு மிகுந்த ஆறுதலைத் தரும் வேதப்பகுதியாகத் தியானப்பகுதி அமைந்திருக்கிறது. பிறர் படுகிற துன்பங்களைப் பார்த்தும் பாராதவர் போலும், கேட்டும் கேட்காதவர் போலும் தான் தன்னுடைய காரியம் என்ற நோக்கில் போகிறவர்கள் தான் இவ்வுலகில் அதிகம். அப்படிப்பட்ட உலகில்தான் நாம் வாழுகிறோம். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறி°து, அந்த ஏழைத்தாயின் கண்ணீரைக் கண்டார். அவர்கள் அழுது புலம்புவதைக் கேட்டார். அந்தத் தாய்க்கு ஆண்டவர் உதவி செய்தார். அது அவர்கள் வாழ்வில் கடவுள் தந்த பெரிய ஆறுதல், விடுதலை. இன்றைக்கு நம்முடைய கஷ்டங்களைப் பார்த்து, நம்முடைய துக்கங்களை விசாரித்து நமக்கு ஆறுதல் சொல்லுவதற்குரிய ஆட்கள் மிகவும் குறைவு. நம்முடன் பிறந்தவர்கள்கூட நமது துன்ப நேரங்களில் நம்மோடு இருப்பதில்லை.
ஆனால் நம் ஆண்டவர் நம் கண்ணீரைத் துடைக்கிறவர், நம்முடைய துக்கங்களை விசாரிக்கிறவர். நமக்கு ஆறுதலைத் தருபவர். நம்மைத் தட்டிக்கொடுத்துத் தூக்கி விடுகிறவர். அப்படிப்பட்ட ஆண்டவர் இயேசுவை அவருடைய வார்த்தையை நம்புவோம். விசுவாசிப்போம். கர்த்தர் நமக்கு உதவி செய்வார்.
நாயினூர் விதவைத் தாயின் கண்ணீரைத் துடைத்த ஆண்டவரே, எங்கள் கண்ணீரையும் நீர் துடைக்கிறீர். இந்த உமது அன்புக்கு நன்றியுடன் வாழ எங்களுக்கு உதவும். ஆமேன்.