1 திமோத்தேயு 6 : 6-11 10 ஜனவரி 2023, செவ்வாய்
“இரத்தஞ் சிந்தும்படி பரிதானம் வாங்கினவர்கள் உன்னில் உண்டு;…. அநியாய லாபத்தைத் தேடினாய், என்னை மறந்து போனாய்…” – எசேக்கியேல் 22 : 12
தீமைகள் எனக் கருதப்பட்ட லஞ்சம், வரதட்சணை, வட்டி போன்றவை காலப்போக்கில் சமூக வாழ்வுடன் ஒன்றி விட்டன என்பது வேதனைக்குரிய செய்தி, குறிப்பாக தங்கள் பணத்தை வட்டிக்கு விடுவது பெரும்பாலானோரின் ஆவலாயும் உள்ளது. தியானப் பகுதியில் வட்டியினாலும், பரிதானத்தினாலும் பணம் சேர்ப்பவரை தீர்க்கர் எசேக்கியேல் வழியாக எச்சரிப்பதை காண்கிறோம்.
அன்றாட வாழ்க்கை வாழ இயலாதவர் கடன் வாங்கி, °பீட் வட்டி, கந்து வட்டி என்ற தீமையில் சிக்கி தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது தினசரிச் செய்தியாகவும் உள்ளது.
சுகவீனம் பிள்ளைகளின் கல்வி, வேலை எனத் தேவைகளில் இருப்போர் கடனாக பணம் பெற முயல்வதுண்டு, கடன் வழங்குவது விரும்பத் தக்கது எனவும் வட்டி கண்டனத்துக்குரியது எனவும் திருமறையில் காண்கிறோம்.
பிறருக்கு கடன் வழங்கி உதவுகிறோம் என்பவர்கள் தன்னை நாடுபவர்க்கு வட்டியில்லாமல் வழங்கி உதவிட வேண்டும். நன்மை செய்தலில் செய்பவர் ஒரு பகுதியை இழந்து தான் ஆக வேண்டும். தான் பணக்காரனாவதற்கு பிறரை ஏழ்மைக்கு உட்படுத்தக் கூடாது.
அந்தப் பணம் எப்போதும் தீமையே. இவ்வாறு சேகரித்த பணம் நிச்சயம் அழிந்து போகும்.
சமூகத்தில் நிலவும் பொருளாதாரக் குற்றங்களைக் களைய கிறி°தவம் தன் நிலைப்பாட்டைச் சொல்லித் தான் ஆக வேண்டும். உலகின் ஒளி, உப்பு என்று அழைக்கப்படும் நாம் வரதட்சணை, லஞ்சம், வட்டி என்னும் சமுதாய தீமைகளை ஒழிக்க பேச்சளவில் நிறுத்தி திருப்தியடைகிறோமா?
கடவுளின் சந்நிதியில் மாசற்றவராய் நிற்க சமுதாயக் குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்.
ஆசீர்வாத ஊற்றாகிய கடவுளே, எங்களுக்கு வாழ்க்கையில் போதுமென்ற மனநிலையினைத் தாரும். பொருளாதாரக் குற்றங்களை ஒரு போதும் ஆதரிக்காத திடநம்பிக்கையையும் மன உறுதியினையும் தாரும். இயேசுவின் வழியாக ஆமேன்.