ஏசாயா 43 : 1-5 15 நவம்பர் 2022, செவ்வாய்
“பயப்படாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன், உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன்.” – ஏசாயா 43 : 1
உலகில் கூஏ, ரேடியோ தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் வருவதற்கு முன்பு, எனது தாத்தா, பாட்டி கடிதம் எழுதும் பழக்கத்தை வைத்திருந்தனர். உங்கள் பேரில் அன்பும் அக்கறையும் உள்ள ஒருவர் ஒரு கடிதம் அனுப்பினால், அதை நீங்கள் ஒருமுறை மட்டும் வாசித்து விட்டு, கசக்கி எறிய மாட்டீர்கள். மீண்டும் மீண்டும் வாசித்து பத்திரப்படுத்துவோம். அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு குறியீடும் முக்கியத்துவம் வாய்ந்ததே. அதுபோன்றே உங்கள் பேரில் அக்கறையுள்ள ஒருவர் அனுப்பிய கடிதம், சிலவேளைகளில் வாழ்வில் கிடைத்த ஒரு பொக்கிஷமாகவும் மதித்துப் போற்றப்படலாம்.
கடவுளின் வார்த்தை ஒரு காதல் கடிதம், அன்பின் கடிதம், கடவுளாலே மனிதருக்கு எழுதப்பட்டது. பூமியின் மேல் வாழ்ந்த, வாழுகிற, வாழப்போகிற அனைத்து மானிடருக்கும் அவர் தர இருக்கிற புதுவாழ்வு, இரட்சிப்பு என்பதைப் பற்றிய கடவுளின் கடிதமே அது.
இன்று கடவுள் உன்னைப் பேர் சொல்லி அழைக்கிறார், உனக்காக வாழ்வும் இரட்சிப்பும் தர விரும்புகிறார்.
`பயப்படாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன், நீ என்னுடையவன்,’ என்கிறார்.
நம்மில் அன்பு கூறுகிற கடவுள், நம்மை பாதுகாக்கிற கடவுள் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார். யார் நம்மை கை விட்டாலும், அவர் கைவிடுவதில்லை.
அவருடைய வார்த்தைகள் சாதாரண மனிதனின் வார்த்தை போன்றதல்ல. அவை மனிதனுக்கு உண்மையான வாழ்வை, உருவாக்கித் தருகிறது.
ஏசாயாவோடு கர்த்தர் பேசுவதை கேளுங்கள். `நீர் நிலைகளை நீ கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன், ஆறுகளை நீ கடக்கும் போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை; தீயில் நீ நடக்கும் போது அது உன்னைச் சுடாது, அக்கினி ஜுவாலை உன்மேல் பற்றாது. நானே கர்த்தர், உன் கடவுள், நானே இஸ்ரவேலின் பரிசுத்தம், உன் இரட்சகர்.’
இந்தக் கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார். நம்மை எல்லா தீமைக்கும் காப்பார் என்ற விசுவாசத்தோடு வாழ்வோம்.
அன்பின் பரலோகப் பிதாவே, உமது வார்த்தையாகிய திருமறையின் ஒவ்வொரு வார்த்தையும் மாபெரும் பொக்கிஷமாக கருதவும், இந்த பாவ உலகிற்கு உமது அன்பு, கிருபை எந்த அளவு பெரியது என்பதை புரிந்து கொள்ளவும் உதவும். இயேசுவின் பெயரால் வேண்டுகிறோம் பிதாவே. ஆமேன்.