1 கொரிந்தியர் 1 : 4-9 07 நவம்பர் 2022, திங்கள்
“உங்களில் நற்கிரியை ஆரம்பித்தவர் கிறிஸ்து.” – பிலிப்பியர் 1 : 6
ஒரு மண்பாண்டக்குயவன் தான் செய்யப்போகும் பொருட்களை, தயாராக்க மிகவும் கடினமாக உழைக்கிறான். மண்ணை பதப்படுத்துகிறான். அதை செய்யும் போது தேவையில்லாததை வெட்டி எடுப்பான். உருவாக்கினதை சூளையில் போட்டு எரிப்பான். அதை மீண்டும் எடுத்து வண்ணம் பூசி அழகு சேர்த்து, மீண்டும் சூளையில் வைத்து எரித்து, அதன் அழகு மிகவும் கவரக்கூடியதாக மாற்றுவான். இத்தனை போராட்டங்களை தாண்டியே மண்பாண்ட சிற்பங்கள் நமக்கு கிடைக்கிறது.
இந்த உண்மைகள், நமது இன்றைய தியானத்தின் மையக் கருத்துக்கு நம்மை நடத்துகிறது. திரியேகக் கடவுள் நமது வாழ்வை வனைகின்ற திறமையுள்ள மண்பாண்டக் கலைஞரைப் போன்றவர். நம்மைப் பற்றிய மேலான எதிர்பார்ப்பும், உன் வாழ்வைக் குறித்த நல்ல திட்டங்களும் அவரிடத்தில் உண்டு. ஒருவேளை, அவருடைய நடத்துதல்கள் உனது விருப்பத்துக்கு மாறாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவருடைய திருசித்தத்துக்கு ஏற்ப உங்களை வனைவதற்கு, வாழ்வில் சில தருணங்களை, சூழ்நிலைகளை அவர் பயன்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொறுமையோடு, கவனத்துடன் வேலை செய்கிற அந்த மண்பாண்டக் கலைஞனைப் போலவே கடவுளாகிய கர்த்தரும் வேலை செய்து கொண்டேயிருக்கிறார். உனது பாவங்களை மன்னிக்கிறார், உன் வாழ் நாள் முழுவதும் உன்னைப் பயிற்றுவிக்கிறார். நீ எதிர்பாராத வேளையில் சூளையின் சூடு உன்னைத் தீண்டவும், சில வேளைகளில் நீ ஒய்வையும், சமாதானத்தையும் காண அவர் வழிநடத்துகிறார். இவையனைத்தும் உனது வாழ்வுக்கான அவருடைய அழகிய திட்டமே.
நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான செய்தி இதுவே. கடவுள் உன்னில் அன்பாயிருக்கிறார். அவர் உனக்காக வைத்திருக்கும் நல்ல நோக்கம் நிறைவேறும் வண்ணம் அவர் உன்னைத் தம் கைகளில் வைத்து வனைந்து கொண்டிருக்கிறார்.
எனது பரலோக பிதாவே, அனைத்தையும் உருவாக்குகிற சிருஷ்டி கர்த்தாவே, என்னை உருக்கும், என்னை வனையும், என்னை நிரப்பும், என்னைப் பயன்படுத்தும். இவையனைத்தையும் எனக்காய் இவ்வுலகில் வந்து, எனக்காய் மரித்து, உயிர்த்து என்னை உமக்குச் சொந்தமாக்கித் தந்த எனதருமை இரட்சகர் இயேசுவின் திருப்பெயரால் வேண்டுகிறேன். ஆமேன்.