யாத்திராகமம் 34 : 5-7 17 அக்டோபர் 2022, திங்கள்
“கர்த்தர் இரக்கமும் தயவும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுள்ள கடவுள்;” – யாத்திராகமம் 34 : 6
தியானப் பகுதி கடவுள் இஸ்ரவேல் மக்கள்மேல் கொண்ட பரிவைக் காட்டுகிறது. இஸ்ரவேல் மக்களுடன் கடவுள் உடன்படிக்கை செய்தார். தான் இரக்கமும், கிருபையும் உள்ள கடவுள் என்பதை மோசேயின் வழியாக தெளிவுபடுத்துகிறார். கடவுள் மோசேயை சீனாய் மலைக்கு அழைத்தார். இஸ்ரேல் மக்களுக்கான கட்டளைகளை இரு கற்பலகைகளாக கொடுக்க அழைத்தார். மோசே மலையில் ஏறி சென்று நாற்பது நாள் ஆனது. இஸ்ரவேல் மக்களோ காத்திருக்க மனம் இல்லாமல் தங்களுக்கென்று ஆரோனை கொண்டு பொன் கன்றுக்குட்டி வார்த்து கடவுளாக வணங்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட கடவுள் மிகவும் கோபம் கொண்டு அவர்களை அழிப்பதாக கூறினார். கடவுளின் அன்பைப் பெரும் தகுதியை இஸ்ரவேல் மக்கள் இழந்துபோனார்கள்.
மோசே அவர்கள் மனம் திரும்ப ஒரு சந்தர்ப்பம் கேட்கிறார். கடவுள் ஒப்புக்கொண்டு கடவுள் தகுதி அற்ற – தகுதி இழந்த இஸ்ரவேல் மக்களோடு உடன்படிக்கை ஒன்று செய்கிறார். அப்பொழுது கடவுள் தமது நாமத்தை இரக்கமுள்ள கடவுளாக வெளிப்படுத்துகிறார்.
இஸ்ரவேல் மக்களோ வணங்கா கழுத்து உள்ள ஜனமாக கடவுளின் கிருபையைத் தள்ளிப்போட்டார்கள். கடவுள் தமது இரக்கத்தை உத்தம இஸ்ரவேலாகிய இயேசுகிறிஸ்துவில் வெளிப்படுத்தினார். இயேசுவில் கடவுளின் இரக்கத்தை இன்றும் கடவுளின் வார்த்தையில் நாம் உணரமுடியும்.
இயேசு கிறிஸ்துவில் கடவுளின் இரக்கத்தை பெற்றுக் கொள்ள நீங்கள் ஆயத்தமா? உங்கள் தவறை / பாவத்தை உணருங்கள். பாவ பரிகாரியாம் இயேசுவில் விசுவாசம் கொள்வோம். பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ளுங்கள். கடவுளின் கிருபையில் இணைந்துக்கொள்ளுங்கள்.
கிருபையும் இரக்கமுள்ள கடவுளே! உமது கிருபையை எங்களுக்கு உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவில் வெளிப்படுத்தினதற்காக நன்றி செலுத்துகிறோம். உமது இரக்கத்தைப் பெற்று கிருபையில் நிலைத்து வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.