தீத்து 2 : 11-13                                   12 அக்டோபர் 2022, புதன்

“எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி…” – தீத்து 2 : 11

ஆதியிலே கடவுள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். படைப்பு வரலாற்றின் சுருக்கம் இது. கடவுள் ஐந்து நாட்கள் அண்டசராசரங்களையும் படைத்துவிட்டு, ஆறாம் நாள் மனிதனைத் தமது சாயலில் உருவாக்கினார். படைப்பின் மகுடமாய் உருவாக்கினார். பரிசுத்தம், பாக்கியம், ஞானம் கொண்ட தேவ சாயலைத் தந்தார். மனிதனோ கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்தான். கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு பிரிந்து போனது. மனிதன் தன்னில்தானே கடவுளோடு உறவைச் சரி செய்துக்கொள்ள முடியாது. கடவுளே மனுக்குலத்துடன் உறவை சரி செய்யும் திட்டம் அமைத்தார். அது கிருபையின் திட்டம்.

பவுல் தீத்துவிற்கு எழுதிய நிருபத்தில் கடவுளின் கிருபை இயேசுகிறிஸ்துவில் பிரசன்னமானது என்று குறிப்பிடுகிறார். தேவகிருபையின் பிரசன்னம் எல்லாரும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு என்பதையும் குறிப்பிடுகிறார்.
கடவுள் மனுக்குலத்தை மீட்டுக்கொள்ளும்படி தமது ஒரே பேறான குமாரனை காலம் நிறைவேறினபோது அனுப்பினார். மனுக்குலத்தின் பாவ பரிகாரியாக இயேசுகிறிஸ்துவை அனுப்பினார். இயேசுகிறிஸ்துவின் பிறப்பு எல்லா ஜனத்துக்குமுரிய சந்தோசம். அவரின் சிலுவை மரணம் அனைவருக்கும் உரிய மீட்பு. கடவுளின் கிருபையின் பிரசன்னம்.

கடவுளின் கிருபையில் அனைவருக்கும் இடமுண்டு. இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற யாவர்க்கும் இரட்சிப்பு. இதில் பாகுபாடு இல்லை. ஆண், பெண், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன், சமூக அந்தஸ்து உள்ளவன், இல்லாதவன் என்று எவ்வித பாகுபாடும் இல்லை. இரட்சிப்பு அனைவருக்கும் உரியது. இயேசுவில் பிரசன்னமான கடவுளின் கிருபை அனைவருக்கும் உரியது.

இன்றைக்கு கடவுளின் கிருபை இயேசுகிறிஸ்துவில் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவில் நமக்கு பாவமன்னிப்பைத் தந்துள்ளார். நாம் மீட்பை பெற்றவர்கள். புதுவாழ்வே கிறிஸ்தவ வாழ்வு. கடவுளின் அன்பை பிறரிடம் வெளிப்படுத்தும் வாழ்வு. கடவுளை நேசிப்போம். அயலானை நேசிப்போம். கடவுளின் கிருபையில் வாழ கடவுள் உதவி செய்வாராக.

அன்பின் இறைவா, உமது கிருபையை எங்களுக்காக இயேசுகிறிஸ்துவில் வெளிப் படுத்தினதற்காக நன்றி செலுத்துகிறோம். இயேசுகிறிஸ்துவில் நாங்கள் பெற்றுக் கொண்ட பாவமன்னிப்பாகிய மீட்பின் வாழ்வில் நிலைத்திருக்க உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.