மத்தேயு 20 : 1-16 17 செப்டம்பர் 2022, சனி
“பரலோக ராஜ்யம் திராட்சத்தோட்டத்தையுடைய வீட்டெஜமான் ஒருவனுக்கு ஒப்பாகும்.” – மத்தேயு 20 : 1
ஓ, என்ன ஒரு விசித்திரமானக் கதை இது! திராட்சை தோட்டத்தில் அறுவடையை விரைவாக முடித்து விடவேண்டும் என்ற அவசரத்தில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் செயல்படுகிறார். ஒரே நாளில் வேலையாட்களைத் தேடி ஐந்து முறை போய் வந்துள்ளார் என்பதிலிருந்து அவரது அவசரத்தை உணர முடிகிறது. கோடை வெயிலின் தாக்கம், திராட்சை குலைகளால் ரொம்ப நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது. நாளின் நேரம் சுருங்கிக் கொண்டே வர, வேலையாட்களின் சம்பள விபரத்தைக் கூட முடிவு செய்ய விரும்பாமல் ஆட்களை தேடி அமர்த்துவதிலே முழுக்கவனமும், மற்றவை பிற்பாடு பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம், என்பது அவரின் எண்ணம்.
அறுவடைப் பணிகள் எல்லாம் முடிந்தது. நிச்சயமாக தோட்டத்தின் எஜமான் மனம் நிறைந்து, மகிழ்ச்சியுடன் இருந்திருக்க வேண்டும் என்பது அவர் எடுத்த முடிவில் தெரிகிறது. அனைவருக்கும் ஒரு நாளைக்கான முழு சம்பளம், அவர்கள் எவ்வளவு நேரம் பிந்திவந்திருந்தாலும் பரவாயில்லை, எவ்வளவு நேரம் வேலை செய்திருந்தாலும் பரவாயில்லை. பிந்திவந்து வேலையில் சேர்ந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. இப்படி ஒரு அற்புதமான வெகுமதி தங்களுக்குக் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், காலையிலிருந்தே வந்து, முதல் குழுவாக பணியாற்றியவர்களுக்கோ, இதைக் கண்டு கோபம். ஏன்? ஏனெனில் வேலைக்குச் சம்மதித்த போது, `நல்ல சம்பளம்’ என்பது இப்போது அவர்கள் பார்வையில் அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை பிந்தி வந்தவர்களுக்கு தங்களுக்கு இணையான சம்பளம் கொடுத்ததை அவர்கள் விரும்பவில்லை.
எதிர்பாரா வண்ணம், இதே மனநிலை இயேசுவின் அடியார்களின் வாழ்விலும் தொற்றிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. நாம் கூட பலவேளைகளில் இவ்வாறு எண்ணத் தூண்டப்படுகிறோம். நம்முடைய விசுவாச வாழ்க்கையின் நிமித்தம் கடவுள் நம்மை, `மிக உன்னதமான’ இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.
உங்களுக்கும் அந்த மாபெரும் ஆசீர்வாதங்கள் உண்டு கடவுள் அளவற்ற மகிழ்ச்சியை உங்கள் மீது பொழிகிறார். எல்லாருக்கும் தேவையான அளவு கடவுளின் அன்பு நிறைவாகவே உள்ளது. தேவையான கிருபை, தேவையான இரக்கம், தேவையான அனைத்துமே தேவைக்கு மேல் உள்ளது. தயாளமும், கிருபையும் நிறைந்த உள்ளம் கொண்ட எஜமானோடு சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடுங்கள். பிறரைப் பொறாமையுடன் பார்க்காதீர்கள். அத்துடன் தாமதமாகவே வந்தாலும் அப்படிப்பட்ட சகோதர சகோதரிகளுடனும் சேர்ந்து கொண்டாடுங்கள். கடவுளின் அறுவடை நமது வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. மகிழ்ந்திருப்போம்.
அன்பின் பரம பிதாவே, உமது பிள்ளைகளாகிய பிறரை நீர் ஆசீர்வதிக்கும் போதும், அதுபோல நீர் என்னை ஆசீர்வதிக்கும் போதும், அதில் நான் மகிழ்ச்சியடைந்து உம்மைத் துதிக்க உதவி செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.