1 கொரிந்தியர் 4 : 9-13                                10 ஆகஸ்ட் 2022, புதன்

“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, எல்லாவித தீயமொழிகளையும்….. சொல்வார்களானால் நீங்கள் பாக்கியவான்கள்.” – மத்தேயு 5 : 11

ஆண்டவர் இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வில் நேரிடும் துன்பங்களை சீடர்களுக்கு முன்னறிவித்ததை கூறுகிறது தியானப்பகுதி.

பாக்கிய வசனங்களில் இதுவரை ‘அவர்கள்’ என்று படர்க்கையில் எதிர்காலச் சொல்லைப் பயன்படுத்தின இயேசு, இந்தப் பகுதியில் ‘நீங்கள்’என்று முன்னிலையையும் நிகழ்கால சொல்லையும் பயன்படுத்தினார். தம் சீடருக்கும் தம்மைப் போல் துன்பங்கள் உண்டு என்றார். உலகம் அவர்களைப் பகைக்கும் என்றார்.

அரசியல்வாதிகள் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி தங்கள் தொண்டர்களை கவருவார்கள். ஆனால் நமது வாழ்க்கை துன்பம் நிறைந்த தியாக வாழ்வு என்பதை இரட்சகர் இயேசு வெளிப்படையாகப் பேசினார். தம் சிலுவை மரணம் குறித்து பலமுறை சீடரிடம் தெளிவாக முன்னறிவித்தார்.

சீடர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் வரிசைப்படுத்திக் கூறினார். நிந்தனை, வன்முறைத் தாக்குதல், பொய்யாய் சுமத்தப்படும் தீய மொழிகள் என்பவற்றை சீடர்கள் எதிர்கொள்வார்கள் என்றார்.

தவறுகள் செய்து துன்பங்கள் அனுபவித்தால் பலனில்லை. கிறிஸ்துவினிமித்தம் துன்பமடையும்போது பலன் உண்டு. கிறிஸ்துவில் மன்னிப்புச் செய்தியை அறிவித்த சீடர்கள், துன்பம் அனுபவித்தனர். ஆயினும் அத்தகைய பாடுகளுக்குப் பங்காளிகளானதற்காக மகிழ்ச்சி அடைந்தனர்.
இறையடியார் தானியேலையும், எஸ்தர் காலத்து யூதரையும் இயேசுவின் சீடரையும் துன்பம் சூழ்ந்தது. இருப்பினும் மகிழ்ச்சியுடன் ஏற்றனர். தூய பவுல் நற்செய்தியினிமித்தம் துன்பங்களையும் முடிவில் மரணத் தண்டனையும் அடைந்தார்.

பாடுகளை கிறிஸ்துவினிமித்தம் சகிக்கும் போது பரலோகத்தில் பலன் மிகுதியாயிருக்கும் என்கிறது திருமறை.

சிலுவை மற்றும் பாடுகளற்ற கிறிஸ்துவத்தை பலர் போதிக்கின்றனர். மக்களும் அதை எதிர்பார்க்கின்றனர். சிலுவையின் உபதேசத்தை விட செழிப்பு குறித்த உபதேசம் மக்களால் வரவேற்கப்படுகிறது என்பது கசப்பான உண்மை. ஆனால் இது திருமறை கூறும் செய்திக்கு எதிரானது.
“சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மை பற்றினேன்” எனும் பாடல்வரிகள் நம்மை சிந்திக்க வைக்க உதவட்டும்!

கடவுளே! கிறிஸ்துவின் நிமித்தமும், நற்செய்தியினிமித்தமும் நேரிடும் துன்பங்களை உமது பெலத்தால் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள எங்களுக்கு உதவியருளும். இயேசுவின் வழியே ஆமேன்.