மாற்கு 15 : 1-5                                      05 ஏப்ரல் 2022, செவ்வாய்

“நீ யூதருடைய ராஜாவா என்று கேட்க அவர்;  ஆம் நீர் சொல்லுகிறபடிதான்.” – மாற்கு 15 : 2

இயேசுவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் காரியங்கள் வேகமாக நடைபெற்று வந்தன. பிலாத்து கி.பி. 26 முதல் 36 வரை யூதேயாவில் ரோம பேரரசின் மாகாண கருவூல அதிகாரியாக இருந்தார். இவர் செசரியாவில் தங்கி இருந்தார். பண்டிகை நாட்களில் அமைதியை நிலைநாட்டும்படி எருசலேமில் வந்து தங்குவது வழக்கம்.

இயேசுவைப் பற்றிய குற்றச்சாட்டுகள், அரசியல் குற்றச்சாட்டுகளாக மாற்றப்படுகின்றன. யூத சமய நம்பிக்கைகளுக்கு எதிராகத் தம்மை கடவுளுக்கு சமமாக்கினார். இது தெய்வ நிந்தனை. ஆகவே, இவர் கொல்லப்பட வேண்டும். இந்த குற்றச் சாட்டுடன் யூதர்கள் தேசாதிபதியான பிலாத்துவை அணுக முடியாது. இதனால் முற்றிலும் வேறுபட்ட குற்றச் சாட்டுடன் பிலாத்துவை அணுகினார்கள்.

யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தாருக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் கிடையாது. எனவே, தான் யூதர்கள் இயேசுவை பிலாத்துவினிடம் கொண்டு சென்றார்கள். பஸ்கா பண்டிகை கொண்டாட இருப்பதால் அந்நியர் வீட்டில் புகுந்து தங்களை தீட்டுப்படுத்தக்கூடாது. இதனால் பிலாத்து வெளியே வந்து அவர்களுடன் போசினான். யூதர்கள் இயேசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.

இயேசுவின் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று இவன் தன்னை அரசன் என்று உரிமை பாராட்டுகிறான் என்பது. பிலாத்து இயேசுவினிடம் அவர் அரசை குறித்து விசாரித்தான். இயேசு தம் அரசு இந்த உலகத்திற்குரியதல்ல என்று சொன்னார். இயேசுவின் அரசு புரட்சிக்கும், சூழ்ச்சிக்கும் போராட்டத்திற்கும் அப்பாற்பட்டது என்று விளக்கினார்.

இயேசு மீது சுமத்திய பிற குற்றச்சாட்டுகளையும் விசாரித்தான். நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டவர் தன் நியாயங்களையும் எடுத்து சொல்லுவார். ஆனால் இங்கு இயேசு எதிராக வாதாடாமல் அமைதியாக இருந்தார். இது பிலாத்துவுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.

யூதர்கள் தாவீதின் வம்சத்தில் ஒரு அரசனை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் வேறுபட்டிருந்தது. இங்கு பிலாத்து இயேசுவினிடம், நீ யூதருக்கு அரசனா? என்று கேட்டபொழுது இயேசு, ஆம் என்றார். இயேசு அரசன் என்பதை திருமறை மிகத் தெளிவாய் சொல்லுகிறது.

இயேசு பிறந்தபோது ஞானிகள் யூதருடைய அரசனைத் தேடி கண்டுபிடித்து வணங்கி சென்றார்கள். எருசலேம் வீதிகளில் இயேசு அரசராக பவனி வந்தார். இந்த இயேசு அரசராக உள்ளங்களில், நமது இல்லங்களிலும் வீற்றிருக்க இடங் கொடுப்போம். அவரது கிருபையின் ஆளுகையில் மகிழ்ச்சியாய் வாழ்வோம்.

எல்லாவற்றையும் ஆளுகிற ராஜாதி ராஜாவே! இயேசுவை நாங்களும் அரசராக ஏற்று அவர் ஆளுகையில் நிலைத்து வாழ அருள்புரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.