மாற்கு 14 : 51-52 01 ஏப்ரல் 2022, வெள்ளி
“ஆடையில்லாமல் ஓட்டம் பிடித்தான்.” – மாற்கு 14 : 52
இயேசுவை கொலை செய்யும்படி அவரை பிடிக்க திட்டமிட்டார்கள். ஆள் ஆரவாரமற்ற சூழ்நிலையைத் தேடினார்கள். இதற்கு யூதாசை கருவியாக பயன்படுத்தினார்கள். இச்செயலை செய்வதற்கு முப்பது வெள்ளிக் காசு கைமாறியது.
இயேசு கெத்சமனேயில் மரண வேதனையில் தமது பிதாவிடம் மன்றாடினார். ஆயினும் தன்னை முழுமையாக மரணத்துக்கு அர்ப்பணித்தார். தம்மை பிடிக்க வருவதை அறிந்த இயேசு சீடர்களை எழுப்பினார். போவோம் வாருங்கள் என்றார்.
இயேசு பிடிபட ஆயத்தமாக சீடர்களுடன் எதிர் கொண்டு வந்தார். ஆசாரியரும் மூப்பர்களும் ஏவிவிட்ட ஒரு கூட்ட மக்கள் பட்டயங்களோடும் தடிகளோடும் இயேசுவை நோக்கி வந்தார்கள். ஒருவேளை இயேசுவை பிடிக்கும்போது மக்கள் மத்தியில் ஏற்படும் எதிர்ப்பினை சமாளிக்க இவ்விதம் வந்திருக்கலாம்.
இயேசுவை கைது செய்தபோது எதிர்ப்பு உருவானது. பேதுரு பிரதான ஆசாரியனின் வேலைக்காரன் மல்கூஸ் என்பவரின் காதை வெட்டினார். பேதுரு பலவித தேவைகளுக்காக பட்டயம் வைத்திருக்கலாம். இதைக்கண்டு, வந்தவர்கள் வெகுண்டு எழுந்திருக்க வேண்டும். இதை சகிக்கமுடியாதபடி சீடர்கள் சிதறி ஓடினார்கள். இருளில் மறைந்தார்கள்.
இயேசு சற்றும் எதிர்பாராத வேளையில்நடந்ததைக் கண்டார். காது வெட்டப்பட்டவன் மீது அன்பு கூர்ந்தார். அவன் காதை தொட்டு சுகமாக்கினார். சிதறி ஓடியவர்களில் மாற்கும் இருந்தார். இவர்தான் தன் ஆடையை விட்டு ஓடினார் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிகழ்வு எதிரிகளின் கொடூரத்தைக் காட்டுகிறது.
“மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும்” என்ற வார்த்தைகள் இங்கு நிறைவேறியது. மேசியாவான இயேசுவை குறித்த ஒவ்வொரு தீர்க்க தரிசனமும் நிறைவேறுவதில் அனைத்து தீர்க்கதரிசனங்களும் உண்மையானவை என்று புரிகிறது.
கடவுள் இயேசுவில் நம்மை கிருபையாக அழைத்திருக்கிறார். கிருபையாக விசுவாசத்தில் வளர வழி வகுத்திருக்கிறார். கிருபையின் எத்தனங்களான வசனத்திலும் சாக்கிரமெந்துகளாலும் விசுவாசத்தில் உறுதிப்பட செய்திருக்கிறார். நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், வேதனைகள், சோதனைகள் வரும்போது கடவுளை விட்டு விலகுகிறோம். இது ஓடிப்போவதற்கு சமம்தானே? கடவுள் நாம் இருக்கிற நிலையிலேயே பின்பற்ற அழைக்கிறார். நம்முடைய பெலத்தில் சாராமல் கடவுளைச் சார்ந்து விசுவாசத்தில் உறுதியாய் நிலை நிற்போம். நம் வாழ்வு கற்பாறையில் கட்டப்பட கவனமாய் இருப்போம்.
கடவுளே! விசுவாசத்திற்கு அழைத்திருக்கிறீர். அழைக்கப்பட்ட விசுவாசத்தில் உறுதியாய் இருக்க கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.