மாற்கு 14 : 32-36                              30 மார்ச் 2022, புதன்

“என் சித்தப்படியல்ல உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது.” – மாற்கு 14 : 36

இயேசு ஜெபத்தை தமது மூச்சாக கொண்டார். காலை, மாலை, அதிகாலை, இருட்டோடு என எல்லா நேரமும் ஜெபித்தார். கடவுளோடு பேசுவது அவருக்கு அவ்வளவு பிரியம். இயேசு ஜெபிக்கும்படி கெத்சமனே என்னும் இடத்திற்கு சீடர்களுடன் வந்தார். கெத்சமனே ஒலிவ மரங்கள் நிறைந்த தோட்டமாகும்.

இயேசுவை மரண துக்கம் சூழ்ந்தது. ஜெபத்தில் ஆறுதலடைய சீடர்களை ஜெபிக்க சொன்னார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக் கொண்டு சற்று தூரம் சென்று ஜெபித்தார். பிதாவே இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கட்டும். ஆனாலும் என் சித்தமல்ல உம்முடைய சித்தப்படியே ஆவதாக என்று சொல்லி ஜெபித்தார்.

இயேசு, மெய்யான மனிதனாக தனக்குள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டத்தை அனுபவித்தார். அது வார்த்தையாக வெளிப்பட்டது. ஆவி, இறை சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமென நினைத்தாலும், சரீரமோ அதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறது. மரணம் இயேசுவுக்கு துக்கத்தை கொடுத்தது.

இயேசு முற்றிலும் பாவமற்றவர். இடையறா உறவில் கடவுளோடு நெருங்கி வாழ்ந்தவர். கடவுள் கொடுத்த இந்த கசப்பான பானத்தை பருகியே தீர வேண்டும் என்றால் அதனை தான் பருகியே தீர உறுதியாய் இருப்பதை இயேசுவின் ஜெபம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. தாம் கடவுள் தரும் பாத்திரத்தில் பருக ஆயத்தமே என்ற ஒப்படைப்பு உணர்வுடன் ஜெபிக்கிறார்.

இயேசுவின் மனித வாழ்வு, முற்றிலும் மனித வாழ்வாகவே இருந்தது. கடவுளின் குமாரன் மனிதனானார் என்பதால் அவருடைய மனித வாழ்வில் எந்தப் பிரச்சனையும் எளிதாக்கப்படவில்லை என்பதை நாம் அறிய வேண்டும். இயேசு தெளிந்த சிந்தையுடன் தம்மை பிதாவினிடம் ஒப்படைக்கிறார். இயேசுவின் மன வேதனையை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது.

மரணபயம் நம்மை ஆட்கொள்வது இயல்பு. இதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். நம்மில் மிக சிலரே மரணத்தை துணிவோடு எதிர்கொள்ளுகின்றனர். மனித வாழ்வின் கடைசி எதிரி மரணம்தான். நமது மரண பயம் முழுவதும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. அவர் அதை ஏற்று அனுபவித்ததால், நாமும் நமது மரணவேளையில் துணிவோடு எதிர்நோக்க உதவி செய்வார். நம்மை அதற்கு பலப்படுத்துவார். நாம் இயேசுவின் மரண பாதையில் பயணிப்போம். மரித்து உயிர்த்த இயேசு நித்திய வாழ்வில் நம்மை சேர்ப்பார்.

கடவுளே! இயேசுவின் மரண அனுபவம் எங்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றட்டும். துணிவோடு மரணத்தை சந்திக்க அருள் செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.