மாற்கு 6 : 21-29                   12 மார்ச் 2022, சனி

“நீ விரும்புவது எதுவானாலும்… கேள் உனக்குத் தருவேன்.” – மாற்கு 6 : 22

ஏரோது அரசன் செல்வந்தர்களோடும், பிரதானிகளோடும் தன் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினான். அவன் மனைவியாக்கிக் கொண்ட தனது சகோதரனின் மனைவியின் மகள் நடனத்தைப் பார்த்து மகிழ்ந்தான். அரசன் உற்சாக மிகுதியினால் நடனமாடிய பெண்ணிடம் கொடுத்த வாக்குறுதியே நமது தியானப்பகுதி.

நடனமாடிய பெண் தன் தாயிடம் இதைச் சொல்லி எதைக் கேட்க வேண்டுமென்று கேட்டாள். தாய் யோவான் ஸ்நானகனின் தலையைக் கேட்க சொன்னாள். தாய் சொன்னபடியே யோவானின் தலையைக் கேட்டாள். அரசன் யோவானின் தலையை வெட்டி பரிசளித்தான். விருந்தில் நடந்த விபரீத செயலே நாம் வாசித்த திருமறைப்பகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

யோவான் ஸ்நானகன் அற்புதமாகப் பிறந்த கடைசி தீர்க்க்தரிசி. இயேசுவுக்கு வழியை ஆயத்தம் செய்ய வந்தவர். யோவான் தன் அருளுரைகள் மட்டுமல்ல தன் மரணத்தின் வழியேயும் இயேசுவுக்கு வழியை ஆயத்தம் செய்தார்.
யோவானின் மரணத்தை கூர்ந்து கவனிப்போம். அநீதியாக சிறையில் தனிமையாக அடைக்கப்பட்டிருந்தார். இங்கு அவர் கடவுள் என்னை விடுவிக்கவில்லை. என்று எண்ணி விசுவாசத்திலிருந்து விலகி விடவில்லை. இயேசு ஓர் அற்புதத்தை ஏன் நிகழ்த்தவில்லை என்று நினைக்கவில்லை. புற்றுநோய் தாக்குதல் குறித்த செய்தியை கேட்டிருப்போம். தொலைபேசி அருகில் மணி ஒலிப்பதை பயத்தோடு கேட்க உட்கார்ந்திருப்போம். நாம் நேசிக்கிற ஒருவரின் இழப்பால் திருமணம் நடக்குமா என்று சந்தேகப்படுவோம்.

ஆனால் நம் ஆண்டவர் எதை செய்ய விரும்புகிறார் என்பதை அறியோம். அவர் நம்மை நேசிக்கிறார். நமக்காக தம் உயிரையே கொடுத்தார். நம் சோதனைகளிலும், வேதனைகளிலும், இழப்புகளிலும் அவர் நம்மோடு இருப்பதாக வாக்கு தந்திருக்கிறார்.

கடினமான வாழ்க்கை சூழலில் நாம் அவரைப் பற்றிக் கொள்ள இயலாவிட்டாலும் அவர் நம் கரங்களை பற்றியிருக்கிறார். சிலவேளைகளில் நடக்கும் காரியங்கள் மோசமாகவும், மிக மோசமாகவும் நமக்குத் தோன்றுகிறது. ஆனாலும் கடவுள் எல்லாவற்றையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை மறவாதிருப்போம்.

நாம் இழப்புகளை சந்தித்திருக்கிறோம். அதை ஈடு செய்ய எவராலும் இயலாது. ஒன்றை மறவாதிருப்போம். காலியான வெற்றிடத்தை கடவுள் நிரப்புகிறார். அவரது வாக்குத்தத்தத்தை கடவுள் நிரப்புகிறார். அவரது வாக்குத்தத்தங்கள் இதைதான் நமக்கு தெரிவிக்கின்றன. அவரது திட்டங்களையும் செயல்பாடுகளையும் நம்மால் அறிய முடியாது. ஆனால் தீமை எதுவானாலும் கடவுள் நன்மையாக மாற்றுவார் என்ற நிச்சயத்தில் வாழுவோம்.

வரலாற்றின் நாயகரே! உம் சித்தத்தை அறியாத நாங்கள் உம்மை நம்பி வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.