மாற்கு 4 : 35-36a, 37a                             07 மார்ச் 2022, திங்கள்

“மிகுந்த அமைதல் உண்டாயிற்று.” – மாற்கு 4 : 39

அறிவர் மார்ட்டின் லுத்தர் திருமறை சித்தாந்தங்களை எளிதாக புரிந்துக்கொள்ள கத்தெகிஸ்மு என்ற வினா விடை புத்தகத்தை எழுதினார். விசுவாசப் பிரமாணம் இரண்டாம் பிரிவில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும்போது, ‘இயேசு கிறிஸ்து யார்?’ என்ற கேள்வியை எழுப்புகிறார். அதற்கு அவர் பதில் சொல்லும்போது பிதாவினிடம் அநாதியாய்ப் பிறந்த மெய்யான கடவுளும் கன்னிமரியாளிடம் பிறந்த மெய்யான மனிதனுமாய் இருக்கிறார் என்று பதில் சொல்லுகிறார்.

இயேசுவின் ஊழியப் பாதையில் அவர் செய்த அற்புதங்களும் அடையாளங்களும் மனித அறிவுக்கு எட்டாதவை. நாம் வாசித்த திருமறைப்பகுதி அத்தகைய ஓர் அற்புதத்தை விவரிக்கிறது.

இயேசு ஊழியத்தை ஆரம்பித்த நாள் முதல் இரவு பகல் என்று பாராமல் உழைத்தார். ஓய்வின்றி கால்நடையாகப் பல ஊர்களுக்குச் சென்றார். இதனால் மெய்யான மனிதனாக அவருக்கு களைப்பும் சோர்வும் இருந்தன.

இயேசு கப்பர்நகூமில் ஊழியத்தை முடித்தார். கடல் வழியாக பயணப்பட்டார். பணியின் களைப்பால் படகின் பின்புறம் அயர்ந்து நித்திரை செய்தார். சீடர்கள் படகை ஓட்டிக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் கடலில் புயல்காற்று உருவாயிற்று. காற்று பலமாய் வீசியது. கடலும் அதிகமாக கொந்தளித்தது. சீடர்கள் மாண்டு போவோம் என்று பயந்தார்கள். பயத்தில் களைப்பாய் அயர்ந்த நித்திரையாய் இருந்த இயேசுவை எழுப்பினார்கள். ஆண்டவரே நாங்கள் மடிந்து போகிறோம். இது குறித்து உமக்கு கவலை இல்லையா? என்றார்கள்.

இயேசு விழித்து எழுந்தார். காற்றையும் கொந்தளித்த கடலையும் பார்த்து ‘இரையாதே; அமைதலாயிரு’, என்றார். இயேசுவின் வாயிலிருந்து வார்த்தை பிறந்த உடன் மிகுந்த அமைதல் உண்டாயிற்று.

அன்பானவர்களே! படைப்பில் பிதாவாகிய கடவுளின் வாயிலிருந்து ஆற்றல் மிகுந்த வார்த்தை பிறந்தது. அதன்படியே படைப்புகள் உருவாயின. அதே ஆற்றலை இயேசுவின் வாயிலிருந்து பிறந்த வார்த்தைக்கும் இருந்தது என்பதை உணருவோம்.

நம் வாழ்க்கை பயணத்தில் அலைகளும் திரைகளும் ஏற்படுகின்றன. நோய்கள், இழப்புகள் போன்ற புயல் காற்று வீசுகிறது. இதனால் நாம் தத்தளிக்கிறோம், தடுமாறுகிறோம். கடவுள் கைவிட்டுவிட்டாரோ என்று ஏங்குகிறோம். இயேசு நம்மோடு பயணிக்கிறார் என்பதை மறந்துபோகிறோம்.

விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தவர். இம்மானுவேலராக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆற்றல் மிகுந்த வார்த்தையால் உலகைப் படைத்தவர் நம்மோடிருக்கிறார். நம்மோடு பயணிக்கிறார். அவர் நிச்சயம் நம்மை பத்திரமாக கரை சேர்ப்பார் நித்திய வாழ்வில் கொண்டு சேர்ப்பார் என்ற நிச்சயத்தில் வாழ்வோம்.

எல்லாவற்றையும் படைத்து ஆளுகிற கடவுளே! எங்கள் வாழ்க்கை பயணத்தை பத்திரமாக வழிநடத்தும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.