மாற்கு 2 : 14-17                                    05 மார்ச் 2022, சனி

“பாவிகளையே அழைக்க வந்தேன்.” -மாற்கு 2 : 17

இஸ்ரவேலர் ரோம ஆட்சிக்கு உட்பட்டிருந்தார்கள். ரோமர்களுக்காக வரி வசூலித்த அதிகாரிகளை இஸ்ரவேலர் இழிவாக நினைத்தார்கள், நடத்தினார்கள். வரிவசூலிப்பவர்கள் தீட்டானவர்கள், பாவிகள் என்று எண்ணினார்கள். வரி வசூலித்தவர்கள் ஆயக்காரர் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் அற ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும் பிற இனமக்களோடும் தொடர்பு கொண்டவர்கள் என்றும் கருதப்பட்டார்கள்.

இஸ்ரவேலரில் பரிசேயர் என்ற பிரிவினர் இருந்தார்கள். இவர்கள் யூத சமயத்தை புனிதப்படுத்தியவர்கள். அனைவரும் மோசேயின் நியாயப் பிரமாணத்தின் சட்டதிட்டங்கள்படி வாழவேண்டும் என்று செயல்பட்டவர்கள். வேத பாரகர் என்ற பிரிவினர் நியாயப் பிரமாணத்தை நன்கு கற்றுத் தேறியவர்கள் என கருதப்பட்டவர்கள்.

இயேசு கடலோரம் சென்றபோது அவரிடம் வந்த மக்களுக்கு உபதேசித்தார். பின்பு அங்கிருந்து நடந்து சென்றார். வரி வசூலிக்கும் இடத்தில் லேவி என்பவர் உட்கார்ந்திருந்தார். இவர் அல்பேயுவின் குமாரன். இயேசு லேவியைக் கண்டார். என்னை பின்பற்றி வா என்றார். லேவி இயேசுவின் அழைப்பை ஏற்றார். இயேசுவின் பின் சென்றார்.

இயேசுவின் அழைப்பில் மகிழ்ந்த லேவி இயேசுவுக்கு விருந்து செய்தார். இயேசு விருந்தில் பங்கு பெற்றார். ஆயக்காரர், இயேசுவுக்கு பின் சென்ற சீடர்கள் என பலர் இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தனர்.

பரிசேய வகுப்பைச் சேர்ந்த வேதபாரகர் இக்காட்சியைக் கண்டார்கள். இயேசுவின் சீடர்களிடம் உங்கள் போதகர் ஆயக்காரரோடும், பாவிகளோடும் விருந்து சாப்பிடுகிறாரே என்றார்கள்.

இயேசு வேதபாரகர் சொன்னதைக் கேட்டார். வேதபாரகரிடம் நோயுற்றோருக்குத் தான் மருத்துவர் தேவை சுகமுள்ளவர்களுக்கு மருத்துவர் தேவையில்லையே என்றார். இயேசு அவர்களிடம் நீதிமான்களையல்ல பாவிகளையே அழைக்க வந்ததேன் என்றார்.

மனுக்குலம் பாவத்தில் மூழ்கி தத்தளித்தது. கரைசேர முடியாதபோது கடவுள் மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்டு கரைசேர்க்க இயேசுவை அனுப்பினார். இயேசுவின் அன்பு கல்வாரி சிலுவையில் வெளிப்பட்டது. ஒருவர்கூட நித்திய வாழ்வை இழந்துவிடாதபடி இயேசு தம் உயிரை மாய்த்து நமக்கு புது உயிர் தந்திருக்கிறார்.

நம்மில் பாவம் இல்லையென்போமேயானால் நம்மை நாமே வஞ்சிக்கிறோம். ஜென்ம பாவத்தில் பிறந்த நாம் பாவத்தில் வாழ்கிறோம் என்பதை உணருவோம். இயேசுவின் அழைப்பை ஏற்போம். சிலுவையண்டை வருவோம் மன்னிப்பு பெறுவோம். இயேசுவில் மகிழ்ச்சியாய் வாழுவோம்.

இயேசுவில் எங்களை அழைக்கிற கடவுளே! பாவி என்ற உணர்வோடு சிலுவையண்டை வந்து பாவமன்னிப்பு பெற்று மகிழ்ச்சியோடு வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.