மாற்கு 1 : 9-15 02 மார்ச் 2022, புதன்
“அவர் நாற்பது நாள் வனாந்தரத்தில் தங்கி…” – மாற்கு 1 : 13
இந்த நாள் ‘சாம்பல் புதன்’ என்று அழைக்கப்படுகிறது. முந்திய ஆண்டு குருத்தோலை பவனியின் போது தங்கள் கைகளில் பிடித்திருந்த குருத்தோலைகளை தீயில் சுட்டு அதன் சாம்பலை தங்கள் தலைமீது போட்டு ஆதித் திருச்சபை தவக்காலங்களை தொடங்கினார்கள். எனவே இந்த தவக்கால ஆரம்ப நாளுக்கு சாம்பல் புதன் என்று பெயர் வந்தது.
மனுக்குல மீட்புக்காக பிதாவாகிய கடவுள் இயேசுவை நம்மோடு சமதளத்தில் வாழும்படி அனுப்பினார். இயேசு தம் முப்பதாவது வயதில் யோவானால் யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றுக் கொண்டார். தமது மீட்பின் பணியை உடனே ஆரம்பித்தார். இயேசு வனாந்தரத்தில் நாற்பது நாட்கள் தங்கி உபவாசம் இருந்தார். இக்காலத்தில் ஏற்பட்ட சோதனைகளை, அவர் வேதவசனத்தில் நிலைத்திருந்து வெற்றி கண்டார்.
வனாந்தரம் ஒரு சோதனைக் களம். கடவுளோடு மனிதன் உரையாடும் புனித காலம். வனாந்திர சோதனைகள் இயேசுவை புடமிட்டு சோதித்த இடமாகும். இயேசுவின் தவக்காலம் அவரை இரட்சிப்பின் பணியை துணிவோடு எதிர் கொள்ளவும் நிறைவேற்றவும் பலமளித்தது.
இயேசுவின் முன் தூதரான யோவானின் அருளுரையை இயேசு தொடர்ந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையரசு அருகில் இருக்கிறது. அதைப் பெற மனமாற்றம் அடையுங்கள். கடவுளின் வார்த்தைகளில் நம்பிக்கை வையுங்கள் என்று கூவி அழைத்தார். இன்றும் இக்குரலை நாம் கேட்கிறோம்.
தவக்காலம் மனமாற்றத்தின் காலம். கடவுளோடும் சக மக்களோடும் படைப்புகளோடும் ஒப்புரவாகும் காலம். தவக்காலம் கிறிஸ்தவ விசுவாசத்தின் கருவாக உள்ள இயேசுவின் மரணம் உயிர்ப்பு இவற்றை ஆசரிக்க நம்மை ஆயத்தப்படுத்தும் காலம். உடலையும் ஆன்மாவையும் ஒடுங்கச் செய்து கடவுளுக்கு நம்மை ஏற்புடையவர்களாக்குகின்ற காலம் இது.
நாம் கடவுளின் மக்களாக வாழவேண்டுமெனில், சோதனைகளில் நாம் புடமிடப்பட்டாக வேண்டும். மனமாற்றம் இக்காலத்தில் மிக அவசியமானது. ஆத்தும பரிசோதனைக்கு நம்மை நாமே உட்படுத்தவேண்டும். இது நாம் கடவுளிடமிருந்து எவ்வளவு விலகி நிற்கிறோம் என்பதை அறிந்து கொள்ள உதவும். இக்காலத்தை பிரயோஜனப்படுத்தி நம்மை நாம் ஆய்வு செய்வோம்.
கிறிஸ்தவ வாழ்க்கை பஞ்சுமெத்தையில் வாழ்கிற வாழ்வு அல்ல. அது பாடுகளும், வேதனைகளும், சோதனைகளும் நிறைந்தது. நாம் அனுதின வாழ்வில் இவற்றை எதிர்கொள்ளுகிறோம். இதனால் ஏக்கமும் எதிர்பார்ப்பும் வேதனையும் சோர்வுகளும் தோன்றுகின்றன.
அன்பானவர்களே, இதைக்கண்டு துவண்டுவிடாதிருப்போம். நம்மை அழைத்த கடவுள் உண்மையுள்ளவர். வாக்குத்தத்தங்களை தந்தவர். நிச்சயம் அவர் வழி நடத்துவார். இயேசு சோதனைகளை சந்தித்தார். அவர் நம் சோதனைகளை மேற்கொள்ளும் ஆற்றலை அருளுவார்.
எங்கள் பரம பிதாவே! இயேசுவில் நிலைத்திருந்து சோதனைகளை மேற்கொள்ளும் ஆற்றலை அருளும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.