ஆதியாகமம் 18 : 22-33 26 பிப்ரவரி 2022, சனி
“என் ஜனகுமாரியின் சங்காரங் கண்டு என் கண்ணீர் ஆறாக வடிகிறதே.” – புலம்பல் 3 : 48
புலம்பல் 3வது அதிகாரம் 48லிருந்து 66 வரை உள்ள வசனங்கள் பக்தனின் நடுவர் பணியை எடுத்துகாட்டுகிறது. இந்த 48 வது வசனத்தில் பக்தன் தன் மக்களுக்காக மத்தியஸ்தராக நின்று மன்றாடுகிற ஒரு சிறப்புப் பண்பை காணமுடிகிறது.
நமது ஜெப வாழ்வில் இருக்கின்ற பெரிய குறை பிறருக்காக ஜெபிக்கின்ற வழக்கம் நம்மிடம் மிகவும் குறைவு. நமக்காக, நம்முடைய குடும்பத்திற்காக ஜெபிப்பதோடு சரி. சில நேரங்களில் ஜெபித்தாலும் பெயருக்காக சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு முடிக்கிறோம்.
பரிந்துரை மன்றாட்டை நாம் செய்யும் போது நாம் யாவரும் கிறிஸ்துவின் பிள்ளைகள் என்று அறிக்கை செய்கிறோம். இதன்மூலம் கடவுளுக்கும், நமக்கும், பிறருக்கும் உள்ள உறவு வளருகிறது. பிறருடைய கஷ்டங்களில் நாம் ஜெபிக்கும்போது அவர்களுடைய துன்பங்களை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
– ஆபிரகாம் சோதோம், கொமோராவிற்காக மன்றாடுகிறார்.
– மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்காக மன்றாடினார்.
– யோபு தன் சினேகிதருக்காக வேண்டுதல் செய்த போது கர்த்தர் இழந்து போன ஆசீர்வாதங்களைத் திரும்பக் கொடுத்தார்.
நமது இரட்சகர் இயேசு கிறிஸ்து தமது சீடருக்காகவும், பகைவருக்காகவும் திருச்சபைக்காகவும் அதன் ஒருமைப்பாட்டிற்காகவும் மன்றாடினார்.
ஆதி அப்போஸ்தலர்கள் திருச்சபைக்காகவும் திருச்சபை அப்போஸ்தலர்களுக்காகவும் ஜெபித்தார்கள். பவுல் தீமோத்தேயுவுக்கு எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும் ஏறெடுங்கள். அமைதியாகவும் சமாதானமாகவும் ஜீவனம் பண்ண எல்லா பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் ராஜாக்கள் அதிகாரிகள் யாவருக்காகவும் மன்றாட வேண்டும் என்று கூறினார்.
நம்முடைய ஜெப வாழ்விலும் நம்மில் இருக்கிற சுயம் மறைய வேண்டும்.
– வறியவர், ஆதரவற்ற மக்களுக்காக ஜெபிப்போம்.
– திருச்சபைக்காக ஜெபிப்போம்.
– திருச்சபை ஊழியருக்காக ஜெபிப்போம்.
– தேசத்திற்காகவும் அதன் தலைவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்தப் பழக்கங்கள் இதுவரை நமது வாழ்வில் இல்லையென்றால் இன்றே மனந்திரும்புவோம். சமாதானத்திற்காக ஜெபிப்பவர்கள் அதற்காக உழைப்பவர்கள். நீதிக்காக ஜெபிப்பவர்கள் அதற்காக பாடுபடுபவர்கள். நாமும் அனைவருக்காகவும் ஜெபிப்போம்.
பிறருக்காக நீ பரிந்துரை செய்;
பரிசுத்தர் பிதாவிடம் உனக்காக பரிந்துரைப்பார்!
எங்களுக்காக மன்றாடும் மத்தியஸ்தரே! உம் வழியில் நாங்களும் பிறருக்காக, மன்றாடி தொண்டு புரிய அருள்கூரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.