யோபு 42 : 2-6                                          27 ஜுலை, 2021 செவ்வாய்

“அவர் குரலின் அதிர்ச்சிக்கு செவி கொடுங்கள் ….. முழக்கத்தை கவனியுங்கள்.” – யோபு 37 : 2

மேகங்கள் மழையைப் பொழிகின்றன. மேகங்கள் ஒன்றோடொன்று உரசிக் கொள்ளும் போது இடி முழக்கமும், மின்னலும் உண்டாகிறது. இடி மின்னலுடன் கூடிய மழை பூமியை செழிப்பாக்குகிறது. சில பொழுது இடி, மின்னல் பெருமழை போன்றவற்றால் தீமையும் விளைகின்றன.

கடவுளின் சத்தம் அவருடைய கட்டளைகளின் வழியாக, (நியாயப் பிரமாணம்) மனுக் குலத்திற்கு அதிர்ச்சியைத் தருகிறது. ஜலப்பிரளயத்தில் மனுக்குலத்தைக் கடவுள் அழித்ததும், சோதோம் கொமோராவை அழித்தலும் மனிதப் பார்வையில் கடவுள் பயங்கரமானவர் என்ற பார்வையை உண்டாக்குகிறது. தீமையை அழிக்கும் அவருடைய இந்தச் செயற்பாடுகள் மின்னலைப் போன்றும் இடி முழக்கத்தைப் போன்றும் நடுக்கத்தைத் தருகிறது. கர்த்தரின் கட்டளைகளுக்கு எவரும் முழுமையாகக் கீழ்ப்படிய முடியாது. ஆகவே மனிதரை இந்த நிலையிலிருந்து விடுவிக்க, இரட்சிக்க இயேசு கிறிஸ்து வழியாக கடவுளின் மீட்பின் திட்டம் கடவுளின் மெல்லிய குரலாக நம்மை ஆறுதல் படுத்துகிறது. தண்டனை என்ற கடவுளின் இடி முழக்கத்தை மறக்கடித்து மன்னிப்பு என்ற மெல்லிய கடவுளின் குரலில் நம்மை மகிழ்விக்கிறது.

நியாயப் பிரமாணம் என்ற அதிர்ச்சியான குரலை அறிந்து கொள்ளும்போது தான் இயேசு கிறிஸ்துவாகிய சுவிசேஷத்தினால் வரும் கிருபை என்ற இனிமையான சத்தத்தை கேட்கவும், தேடவும் உணரவும் முடிகிறது. தண்டிக்கிற, பயங்கரமான கடவுளிடம் எப்படி நாம் நெருங்க முடியும் என பயப்பட வேண்டாம். கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் நாம் கழுவப்பட்டிருக்கிறோம். கடவுளை ‘அப்பா’ என்று அழைக்கும் பேறு பெற்றுள்ளோம். ‘மகனே… மகளே’ என ஏற்றுக் கொள்ளுகிற கடவுள் நமக்கு இருக்கிறார் என்று ஆறுதல் அடைவோம். தண்டிக்கும் கோபத்தை விட மன்னிக்கும் இரக்கம் கடவுளிடம் அதிகம். ஆகவே நம்பிக்கையோடு அவரை நோக்கி மன்றாடுவோம். பாவ மன்னிப்புக்காக அவரை நாடுவோம். அவரது தாலாட்டும் மெல்லிய குரல் கேட்டு மனச் சமாதானத்தோடு வாழ ஆண்டவர் அருள் புரிவார்.

இரக்கமுள்ள கடவுளே! கோபத்தை விட கருணையோடு எங்களை மீட்கிறவரே! நாங்கள் எப்போதும் உம்முடைய அன்பிலும் பாதுகாப்பிலும் வாழ உதவும். ஆமேன்.