24 ஜனவரி, 2021 ஞாயிறு
“என்னை நேசிப்பதிலும் தகப்பனையாவது தாயையாவது அதிகமாய் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவனல்ல;….” மத்தேயு 10 : 37
உண்மையில் இன்றைய தியான வார்த்தைகள் நம்மை பயமுறுத்துகின்றன: ‘என்னைவிட தன் தந்தையை அல்லது தாயை நேசிப்பவன் எனக்குத் தகுதியானவன் அல்ல. என்னைவிட மகனையோ மகளையோ நேசிப்பவன் எனக்குத் தகுதியானவன் அல்ல.’ இதற்கு என்ன பொருள்? நாம் விரும்பும் நபர்களை வரிசைப்படுத்த வேண்டும் என்றால் எப்படி அதைச் செய்வது? என் மனைவி அல்லது கணவன் குழந்தைகளை நான் நேசிப்பது போலவே நான் கடவுளையும் நேசிக்க வேண்டுமா?
இயேசு அப்படி அர்த்தப்படுத்தவில்லை. அவர் பேசுவது நம்முடைய அன்பின் செயல்பாடுகள், அன்பின் மிகுதியால் நிகழும் நமது தேர்ந்தெடுத்தல்கள், மற்றும் முடிவெடுத்தல். அவருடைய கேள்வி இதுதான்: நான் உங்களுக்குக் கட்டளையிடுவதற்கும், உங்கள் அன்புக்குரியவர் விரும்புவதற்கும் இடையில் நீங்கள் ஒரு முடிவை எடுக்கும்போது, எந்த வழியில் செல்வீர்கள்? கிறிஸ்தவக் குடும்பங்களில் கூட இதில் அடிக்கடி தடுமாற்றம் வருகிறது. உங்களுக்கு அன்பானவர் கடவுளுக்கு எதிரான செயல்களைச் செய்யும்படி உங்களைத் தூண்டும்போது அதற்கு செவி சாய்க்காதீர்கள் என்று ஆண்டவர் சொல்லுகிறார். இதுபோன்ற சூழ்நிலைகள் உங்களை நெருப்பைப் போல சோதிக்கக்கூடும். ஆனால் ஆண்டவர் உங்கள் பக்கம் நிற்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். எல்லரையும்விட அதிகம் கடவுளை நேசிக்கிறவர்கள் இயேசுவின் வார்த்தையை மறுக்க மாட்டார்கள். இதுவே ஆண்டவரின் வார்த்தைகளின் அர்த்தம். மனிதனின் பாச உணர்வுகள் தவறல்ல. அதே சமயம் நம்முடைய செயல்பாடுகள், தேர்வுகள் இறைச் சித்தப்படி அமைவது முக்கியம்.
இது மிகவும் சிக்கலான, ஆபத்துகள் நிறைந்த பகுதி. இந்தப் பிரச்சனையால் உடைந்துபோன, பிரிந்துபோன குடும்பங்கள் ஏராளம். இயேசுவின் வாழ்விலும் கடவுளுடன் அவருக்கிருந்த அன்பின் பிணைப்பு தான் அவரை சிலுவைக்கு வழி நடத்தியது. இந்த ஊழியப் பயணத்தின் இடையே அவர் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவுகளையோ, நண்பர்களையோ பற்றி கவலைப்படவில்லை.
அவர் கடவுளுடைய மக்கள் அனைவரையும் மீட்பதற்கும், கடவுளின் குடும்பத்திற்குள் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். நாமும் இறைவனைச் சார்ந்திருப்போம். அதனால் வரும் வலிகளை அவர் புரிந்துகொள்கிறார். அதைச் சுமக்க அவர் உங்களுக்கு உதவுகிறார்.
அன்பான பிதாவே, நான் இவ்வுலகில் கடுமையான தேர்வுகளை எதிர்கொள்ளும்போது, சரியானதைச் செய்ய எனக்கு உதவும். இயேசுவின் வழியே, ஆமேன்.
