மத்தேயு 7 : 13-14 28 டிசம்பர் 2020, திங்கள்
“இயேசு அவனிடம்: வழியும் சத்தியமும் ஜீவனும் நானே; என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடம் வரான்.” – யோவான் 14 : 6
கடவுள் ஆழி சூழ் உலகைப் படைத்தார். அதில் தன்னோடு வாழும்படி மனிதனையும் படைத்தார். கடவுளோடுள்ள உறவில் வாழ வாழும் வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தார். ஆனால் மனிதன் பாவம் செய்ததினால் கடவுளோடு வாழும் பாக்கியமான வாழ்வை இழந்து போனான். உலகில் பிறக்கிற அனைவரும் மரித்து தான் ஆகவேண்டும். மரணம் இயற்கையானது, இயல்பானது. மனிதன் மரிக்கும் போது கடவுளோடு வாழ ஆசைப்படுகிறான். தன் அறிவுக்கு தோன்றியபடியெல்லாம் முயற்சி செய்கிறான். வழி தெரியாது தவிக்கிறான். இயேசு விண்ணுலகம் செல்லும் முன்பு சீடர்களிடம், ஒரு இடத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன் என்றார். நான் போகிற வழி உங்களுக்குத் தெரியும் என்றார். தோமா இயேசுவிடம் நீர் போகிற இடம் தெரியாதே, வழி எப்படித் தெரியும் என்று கேட்டார். இதற்கு இயேசு சொன்ன பதிலே நமது தியானப் பகுதி.
கடவுள் மனிதர்முன் இரண்டு வழிகளை வைத்திருக்கிறார். ஒன்று வாழ்வுக்கும் அமைதிக்கும் செல்லுகிற வழி. அடுத்தது சாவுக்கும் துன்பத்திற்குமான வழி. மனுக்குலம் அழியா வாழ்வைப் பெறவேண்டும். நித்திய வாழ்வில் இணைய வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். இதை அடைகிற வழியைத் தான் கடவுள் இயேசுவில் உருவாக்கியிருக்கிறார். இயேசுவின் வழி கிருபையின் வழி. அவர் மரித்து விண்ணுலகம் சென்றார். புதிதும் ஜீவனுமான வழியைத் திறந்து வைத்திருக்கிறார். அது கிருபையின் வழி. இயேசு புதிய ஆதாரமாக வந்தார். அவர் உபதேசம் புதிது. அவர் கட்டளைகள் புதிது. அவருடைய வழியும் புதிது. இயேசு விண்ணுலக வாழ்வைப் பெற தடையாய் இருந்தார். இயேசு நமது பாவத்தை தம்மீது ஏற்று சிலுவையில் மரித்ததால் விண்ணுலக வாழ்வின் வாசல் நமக்குத் திறந்திருக்கிறது.
இயேசு விண்ணுலக வாழ்வுக்கு வழிமட்டுமல்ல, விண்ணுலக வாழ்க்கை வழித் துணையும் அவரே. காரணம் வாழ்வுக்குச் செல்லும் வழி ஒடுக்கமானது. வாசல் இடுக்கமானது. இந்த வழி நம்மை நித்திய இளைப்பாறுதலுக்கு வழிநடத்துகிறது. அதேவேளையில் அழிவுக்குச் செல்லும் வழி அகலமானது, அதன் நுழைவாயில் விரிவானது. இதில் இலகுவாக செல்லலாம்.
கிறிஸ்தவத்தை புதிய நெறி, புதிய வழி என்று அழைப்பார்கள். இயேசுவில் வைக்கிற விசுவாசத்தினால் நித்திய வாழ்வின் பாதையை கண்டிருக்கிறோம். இயேசு என்னை பின்பற்றி வா என்று நம்மை அழைக்கிறார். அவரது கரங்களை நாம் பற்றிக் கொள்வோம். அவர் அடிச்சுவடுகளை பின்பற்றி அழியாத நிலையான நிறைவான வாழ்வைப் பெறுவோம். இயேசுவில் தான் நம் விடுதலைப் பயணம் நிகழ்கின்றது. அன்பின் வழியைப் பின்பற்றி இயேசுவோடு என்றென்றும் நடப்போம்.
வாழும் வழிமுறைகளை வகுத்துத் தந்த கடவுளே! வழி தவறி, உம்மைக் கண்டடைய தடுமாறிய போது இயேசுவை வழியாக தந்தீர், நன்றி. அவரோடு இணைந்து பயணப்பட கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
