எண்ணாகமம் 6 : 22-27                 01 ஜனவரி 2021, வெள்ளி

“கடவுள் உன்னை ஆசீர்வதித்து உன்னைக் காப்பாராக.”– எண்ணாகமம் 6 : 24

தியானமலர் வாசகர்கள் அனைவருக்கும் வான்மலர் நிலையத்தாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய ஆண்டில் நின்று கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டின் கசப்பான அனுபவங்களால் நம் உள்ளங்களில் ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஏற்படுவது இயற்கை. இச்சூழலில் `கடவுள் நம்மை ஆசீர்வதித்து நம்மை காப்பார்’ என்று வாக்களிக்கிறார்.

நாம் வாசித்த திருமறைப் பகுதி ஆரோனுடைய ஆசீர்வாதம் என்று அழைக்கப்படுகிறது. நாம் காண்கிற, காணாத யாவையும் கடவுள் படைத்தார். இதை விசுவாசப் பிரமாணம் முதல் பகுதியில் அறிக்கையிடுகிறோம். அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம் முதல் பகுதிக்கு அறிவர் லுத்தர் பொருள் சொல்லும் போது `கடவுள் என்னையும் சகலவற்றையும் படைத்து எனக்கு உடலையும் ஆன்மாவையும் கண், காது முதலிய சகல அவயங்களையும், புத்தியையும், சகல திறமைகளையும் தந்து இன்று வரை காத்து நடத்தி வருகிறார் என்று விசுவாசிக்கிறேன் என்கிறார்.’ அத்துடன் என் உடலுக்கும் வாழ்வுக்கும் தேவையான சகல, ஆதாரமாகிய ஊண், உடை, பிழைப்புத் தொழில் மனைவி, கணவன் பிள்ளைகள், வீடு, வாசல், ஆடு, மாடு, நிலம் முதலிய எல்லா செல்வங்களையும் அவர் எனக்குக் கட்டளையிட்டு என்னை ஒவ்வொரு நாளும் நிறைவாகப் பராமரித்து சகல மோசங்களுக்கும் என்னை மறைத்து சகல தீமைகளுக்கும் விலக்கிக் காத்து வருகிறார்.

இவ்வாறு சொல்லிவிட்டு அதற்கான காரணத்தை பின்வருமாறு சொல்லுகிறார் `அவர் இவை எல்லாவற்றையும் தகப்பனுக்குரிய அன்புமிகு அருளாலும் சுத்த தயையினாலேயும் எவ்வித தகுதியுமற்ற எனக்குச் செய்து கொண்டு வருகிறார்’ என்று சொல்லுகிறார். நாம் பாவத்தில் வீழ்ந்து கடவுளோடுள்ள வாழ்வை இழந்தபோது இயேசுவில் நம்மை மீட்டுக் கொண்டார். இயேசுவில் நாம் கடவுளை அப்பா பிதாவே  என்று அழைக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.

ஒரு தகப்பன் தன் பிள்கைளுக்காக தன்னை ஒறுத்து, வெறுத்து அழித்து வாழ்வு கொடுப்பது போல நமது பரம பிதா நமக்கு வாழ்வருளுகிறார். கடந்தகால அனுபவங்களின் அடித்தளத்தில் கடவுளில் நம்பிக்கை வைப்போம். நாம் வாழுகிற  உலகம் ஆபத்துக்கள் நிறைந்தது. கடவுள் இச்சூழலில் நம்மை ஆசீர்வதிப்பது மட்டுமல்ல நம்மை எல்லா ஆபத்துக்களிலுமிருந்து பாதுகாக்கிறார். கடவுள் வாக்கு மாறாதவர். நம்மை பிள்ளையாக ஏற்றுக் கொண்டவர். தம் வாக்குத்தத்தங்களை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நிச்சயத்தில் புதிய ஆண்டில் மகிழ்ச்சியாய் வாழ்வைத் தொடங்குவோம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

திரியேக கடவுளே! உம் பெரிதான கிருபையால் புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்க கிருபை செய்தீர் நன்றி. உம் கரங்களைப் பற்றிக் கொண்டு உம் அடிச்சுவடைப் பின்பற்றி தைரியத்தோடு வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.