அப்போஸ்தலர் 26 : 30-32                             27 நவம்பர் 2020, வெள்ளி

“இவன் இராயனுக்கு அபயமிடாதிருந்தால் இவனை விடுதலை பண்ணலாகும்.” – அப்போஸ்தலர் 26 : 32

அகிரிப்பா, முதலாம் அகிரிப்பாவின் மகனாவார். இதனால் இவர் இரண்டாம் அகிரிப்பா என்று அழைக்கப்படுகிறார். இவர் கிலவுதியா பேரரசனால் ரோம அரசின் சில சிறிய மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்பு திபேரியா முதலிய பல மாவட்டங்களுக்கு ஆளுநரானார். பவுலடிகளார் உயிர்த்தெழுதலை மாத்திரம் நம்புகிறவரல்ல, அதோடு இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையும் உடையவர். அதனால் உயிர்த்தெழுதல் குறித்து உறுதியுடன் பேசினார். அகிரிப்பா இதுபற்றி தானும் விரிவாக அறிய விரும்பினார். அகிரிப்பா பவுலடிகளாரை சட்டத்திற்குத் தேவையான ஒழுங்குடன் விசாரிக்க ஆரம்பித்தார். செசரியாவின் ஐந்து சேனாதிபதிகள் படைகள் இருந்தன. உள்ளாட்சி அதிகாரிகளும் அங்கு குழுமி இருந்தார்கள். அதிகார சுற்றத்திற்குத் தேவையான மரியாதையோடு பெஸ்து பவுலடிகளாரை விசாரிக்கும்படி அகிரிப்பாவிடம் அனுமதி பெற்றார்.

அகிரிப்பா எருசலேமிலுள்ள அசமோனிய அரண்மனையை பெரிதாக்கினார். செசரியாவில் பல கட்டிடங்களை கட்டி எழுப்பினார். மதத்தின் மீது ஆர்வம் அற்றவராகவே வாழ்ந்தார். இவர் யூதர்களை வெறுத்தார். ரோமருக்கு விசுவாசமுள்ளவராக இருந்தார். ஆலயங்களில் அதிகாரம் செலுத்தினார். குருத்துவத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டார். இதனால் எருசலேம் குருக்கள் இவரை வெறுத்தனர். கி.பி. 60-70-ல் ரோமாபுரி மக்களுக்கும் யூதர்களுக்குமிடையே போர் நடந்தது. இப்போரில் இவர் ரோமாபுரி மக்கள் பக்கமே விசுவாசமாயிருந்தார். போரின் முடிவில் இவர் தீத்துவோடு ரோமபுரி சென்றார். அங்கு ரோமப் படைத்தலைவனாக நியமிக்கப்பட்டார். கி.பி. 100-ல் மரித்தார். அகிரிப்பா முன் பவுலடிகளார் பேசி தம் நியாயத்தை எடுத்து வைத்தார். அவற்றைக் கேட்ட அகிரிப்பா பவுலடிகளார் ரோமாபுரி பேரரசருக்கு முறையீடு செய்யாமலிருந்திருந்தால் அவரை விடுதலை செய்திருக்கலாம் என்றார். இதிலிருந்து யூதர்களும் தெர்த்தல்லுவும் சாட்டிய குற்றங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை அகிரிப்பா அறிந்திருந்தார் என்பது நமக்கு புரிகிறது.

அன்பானவர்களே, நாம் மனசாட்சிக்கு மாறாக நடக்காமலும் பேசாமலுமிருப்போம். நம்மைப் பார்க்கிற, நம் பேச்சைக் கேட்கிற மக்கள் மனதில் கடவுள் செயலாற்றுகிறார். பவுலடிகளார் தன் பிரச்சனைகள் அனைத்தையும் கடவுளுக்காக ஏற்றார். அத்துடன் கடவுளின் தீர்மானத்தின்படி அவர் ரோமாபுரியில் சாட்சியிட வேண்டியிருந்தது. நம்மை கடவுளின் கரத்தில் ஒப்புவிப்போம். அவர் நடத்துகிற பாதையில் நடப்போம்.

கடவுளே! நீர் எங்கள் உள்ளங்களை ஆராய்ந்து அறிகிறீர். உமக்கு எங்களை ஒப்புவித்து, உம்மை நம்பி, உம்மைச் சார்ந்து வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.