யோவான் 3 : 1-5                           17 அக்டோபர் 2020, சனி

“ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் கடவுள் ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியாதென்று…” – யோவான் 3 : 5

இராபர்ட் டீ நொபிலி இத்தாலி நாட்டைச் சார்ந்தவர். 1606ம் ஆண்டு மதுரை மாநகருக்கு வந்தார். அக்காலத்தில் சமூகத்தின் உயர் வகுப்பினராகக் கருதப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு நற்செய்தி அறிவிக்கும் வாஞ்சையில் தன்னையும் அவர்களைப் போல் மாற்றிக் கொண்டார். உணவுப் பழக்கங்களும், உடைகளும் மாறின. எதிர்ப்புகள் வந்தன. எதையும் பொருட்படுத்தாமல், அநேக உயர் சமூக கிறிஸ்தவரல்லாதவர் கிறிஸ்துவில் இறைவனை ஏற்றுக் கொண்டனர். சாதிப் பாகுபாடுகள் அதிகமாக இருந்தபடியால் பகல் நேரங்களில், உயர் சாதி மக்கள் மத்தியில் பணியாற்றினார். இரவு நேரங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பணியாற்றினார். அதன் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். இரட்சிப்பின் மகிழ்ச்சியை அடைந்தார்கள்.

நிக்கொதேமு என்பவர் ஒரு சன்மார்க்கர். செல்வந்தர், வேத அறிஞர், சனகெரீம் என்ற ஆலோசனை சங்க உறுப்பினர்களில் ஒருவர். சன்மார்க்க பாரம்பரியங்களின் படி யூதமத ஆசாரங்களை திட்டவட்டமாக கடைபிடித்தவர். மேசியாவைக் குறித்த வாக்குத்தத்தங்களை ஆராய்ந்து அறிந்திருந்தவர். ஒருநாள் இரவில் இரகசியமாக இயேசுவை சந்திக்க வந்தார். பகலில் சென்றால் யூதர்கள் தன்னைக் குறித்து இழிவாக எண்ணிவிடுவார்கள் என்பதற்காக இவ்வேளையில் வந்தார். இயேசு செய்த அற்புதங்களைக் கண்டு, இயேசுவை இறைவனிடமிருந்து வந்தவராக கண்டார். இறைவன் உம்மோடிருந்தாலன்றி நீர் செய்கிற இந்த அடையாளங்களைச் செய்ய முடியாது என்றார். இயேசு மறுபடியும் பிறத்தல் என்பது பற்றி நிக்கொதேமுவோடு பேசினார். இதுவே தியானப் பகுதி.

யூதர்கள் புறம்பான அடையாளங்களை காண விழைந்தனர். தண்ணீரால் தங்களை சுத்திகரித்தனர். யோவான் தண்ணீரால் மனந்திரும்புதலுக்குரிய ஞானஸ்நானம் கொடுத்து வந்தார். அது மட்டும் போதாது. பாவமன்னிப்பு தேவை. இது ஆவியானவரால் உண்டாகும் விசுவாசத்தால் மட்டுமே கிடைக்கிறது. இதுதான் மறுபடியும் பிறத்தல் என்றார். மேசியாவின் ஆளுகையில் பங்கேற்க, உள்ளான மாற்றத்திற்கு, மனந்திரும்புதல் தேவை என்பதை அவனுக்கு உணர்த்தினார்.

தற்காலத்தில் அநேகர் இயேசுவை நல்ல குருவாக எண்ணுகின்றனர். இயேசு குருவை விட மேலானவர். இறைமைந்தர். நம் பாவங்களை மன்னித்து நித்திய வாழ்வை அருளுகிறவர். இந்த எண்ணங்களை பரிசுத்த ஆவியானவர் வசனத்தைக் கொண்டு நம்மில் உருவாக்குகிறார். திருமறை வசனங்களை வாசிப்போம். அந்த வசனங்களில் தான் நமக்குரிய நித்திய வாழ்வு இருக்கிறது. வசனங்கள் நித்திய வாழ்வை அருளும் இயேசுவை நமக்குக் காட்டுகின்றன. இறைவனின் வசனங்களை கேட்டுப் படிப்போம், தியானிப்போம். இருதயத்தில் காத்துக் கொள்ளுவோம். நித்திய வாழ்வை பெறுவோம்.

விண்ணுலக வாழ்வின் அதிபதியே! திருமறை எழுத்துக்களில் உம்முடைய குமாரனைக் கண்டு விசுவாசத்தினால் மறுபடியும் பிறக்க எங்கள் உள்ளங்களில் மாற்றம் உருவாக உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.