மாற்கு 1 : 16-20                                           12 அக்டோபர் 2020, திங்கள்

“அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு அவருக்குப்பின் சென்றார்கள்.” – மாற்கு 1 : 20

சீகன்பால்க் ஜெர்மனி நாட்டிலுள்ள சாக்சனி என்ற சிறிய நகரில் பிறந்தவர். செல்வ செழிப்பிலே வாழ்ந்தவர். உலக ஆசீர்வாதங்களை விட இறைவனை அதிகம் நேசித்தது அவர் குடும்பம். சீகன்பால்க்கின் தாயார் கேத்ரின் விசுவாச வீராங்கனை. இவர் தனது மரணப் படுக்கையில், தனது பிள்ளைகளை அழைத்தார், ஆறுதல்படுத்தினார். பிள்ளைகளே உங்களுக்காக பெரிய பொக்கிஷத்தை சேர்த்து வைத்துள்ளேன் என்று சொல்லி வேதாகமத்தைக் கொடுத்தார். இதைத்தேடி வாசியுங்கள். கண்டு பிடிப்பீர்கள் என்று சொன்னார்கள். தாயின் வார்த்தைகள் சீகன்பால்குவை ஊழியத்துக்கு அர்ப்பணிக்கத் தூண்டியது. தனது குடும்பம், நாட்டை விட்டு இறைப்பணியாற்றினார். தமிழ் நாட்டிலுள்ள தரங்கம்பாடி என்ற ஊருக்கு வந்தார்.

செபதேயு கலிலேயாவைச் சேர்ந்தவர், மீன்பிடிக்கும் தொழில் செய்தவர், வசதியானவர். பல மீன்பிடி படகுகள் இவருக்கு இருந்தன. இவருக்குக் கீழ் அநேகர் பணியாற்றி வந்தார்கள். செபதேயு ஆண்டவர் இயேசுவுக்கு நெருங்கிய உறவினர். இவர் சிறு வயது முதலே இயேசுவை நன்கு அறிந்தவர். இவருடைய பிள்ளைகள் யாக்கோபு மற்றும் யோவான் என்பவர்கள். இயேசு கலிலேயா கடலோரமாய் போகையில் பேதுருவையும் அவர் சகோதரர் அந்திரேயாவையும் என் பின்னே வாருங்கள் என்று அழைத்தார். தொடர்ந்து செபதேயுவின் பிள்ளைகள் யாக்கோபு மற்றும் யோவானையும் சீடர்களாக அழைத்தார். இவர்கள் தங்கள் தந்தை, குடும்பம் இவைகளை விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றினார்கள். இதுவே தியான வசனபகுதி.
பின்னே வாருங்கள் என்பது சீடத்துவத்தின் முக்கிய தொடர் ஆகும். இது சீடர்களின் வாழ்வில் ஏற்பட்ட மனந்திரும்புதலை சித்தரிக்கிறது. இவர்கள் சொந்த வருமானம் தரும் பணியினை விட்டுவிட்டு இறைமகன் இயேசு தரும் பணியை மேற்கொண்டார்கள். தங்கள் குடும்ப பிணைப்பினை விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றினார்கள். 31/2 வருடம் இயேசு ஆண்டவரோடு வாழ்ந்தனர். இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இயேசுவுக்கு சாட்சி பகர்ந்தனர்.

இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கிற நாம் நமது பிள்ளைகள் படித்து, பட்டம் பெற்று, உயர்ந்த உத்யோகங்கள் பெற விரும்புகிறோம். நல்லது தான். ஆனால் நம் பிள்ளைகள் இறைப்பணி செய்ய ஊக்குவிக்கிறோமா? அவர்களின் திறமை, வரங்களை இறைப்பணிக்கு பயன்படுத்த ஆலோசனை கொடுக்கிறோமா? இறைப்பணி என்பது அருளுரையாற்றும் பணி மட்டுமல்ல. ஆலயத்தில் நடைபெறுகிற ஓய்வு நாட்பள்ளி, விடுமுறை விவிலியப் பள்ளி, பெண்கள் சங்கம், இளைஞர் சங்கம், ஜெபக்குழு, உபவாசக் குழு, சிறுவர் மன்றம், பாடல் குழு, ஆலய ஆராதனைகள், ஆலய அலங்காரம், ஆலய சுத்திகரிப்பு போன்ற பணிகளைச் செய்ய முன் வருவோம். இவற்றுக்கான அழைப்பு வரும்போது இவையும் இறைப்பணியே என்று அறிந்து ஆலயப் பணிகளில் பங்கடைய பிள்ளைகளையும் மற்றவர்களையும் ஊக்குவிப்போம்.

அன்பின் சிகரமாம் பரலோகப் பிதாவே, நாங்களும் எங்கள் பிள்ளைகளைச் சிறுவயதிலேயே இறைப் பணிக்கு ஒப்புக் கொடுத்து வளர்க்க, பரிசுத்த ஆவியின் வல்லமை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.