யோவான் 5 : 1-15                                      10 அக்டோபர் 2020, சனி

“அந்த மனுஷன் போய், தன்னைக் குணமாக்கினவர் இயேசு என்று யூதருக்கு அறிவித்தான்.” – யோவான் 5 : 15

பெத்சாதா என்பது எபிரேயச் சொல், பெத் என்றால் வீடு. சதா என்றால் இரக்கம். பெத்சாதா என்ற சொல்லுக்கு இரக்கத்தின் வீடு என்று பொருள். எருசலேமில் பெத்சாதா குளத்தில் அமைந்திருந்த மண்டபத்தில் முப்பத்து எட்டு ஆண்டுகள் வியாதியாய் இருந்த ஒருவன் படுத்திருந்தான். நெடுநாள் நோயாளி, ஆதரவற்றவனாக, கவனிப்பாரற்றவனாக, தனியாக இருந்தான். பெத்சாதா குளத்தைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன. அவைகளில் மாற்றுத் திறனாளிகள் தங்கியிருந்தனர். சில சமயங்களில் ஒரு தேவ தூதன் வந்து குளத்துத் தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கும் போது அதில் முதலில் இறங்குபவர் சுகம் பெறுவார். நெடுநாள் நோயாளியாக படுக்கையில் கிடந்த இந்த மனிதனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒரு முறை ஆண்டவர் இயேசு எருசலேம் வந்தார். பெத்சாதா குளக்கரை மண்டபத்தில் 38 ஆண்டுகள் வியாதியாய் படுத்திருந்த அந்த மனிதனைக் கண்டார். அவன் மீது மனதுருகினார். அவன் நெடுநாள் நோயாளி என்பதை அறிந்து கொண்டார். குணமாக உனக்கு மனமுண்டா என்று கேட்டார். இயேசுவைப் பார்த்து ஐயனே! தண்ணீர் கலங்கும் போது என்னை அங்கு கொண்டு விடுகிறதற்கு ஆள் இல்லை. நான் போவதற்குள் வேறொருவன் இறங்கி விடுகிறான் என்று தன் மனவேதனையைத் தெரிவித்தான். இயேசு அவனுடைய ஆதங்கத்தை அறிந்தார். மனதுருக்கம் கொண்டார். உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து போ என்றார். உடனே அவன் குணமாகி தன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து போனான். யூதர்கள் குணமாக்கப்பட்டவனைப் பார்த்து, இது ஓய்வு நாள் அல்லவா. நீ படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது நியாயமாகாது என்றார்கள். உன் படுக்கையை எடுத்துக் கொண்டு போ என்று உனக்கு சொன்னவர் யார் என்று அவனிடம் கேட்டார்கள். தன்னை குணமாக்கியவர் யார் என்று தெரியாது என்றான். அதன் பின்பு இயேசு அவனை எருசலேம் ஆலயத்தில் கண்டு இனி நீ அதிக கேடானதொன்றும் உனக்கு நேரிடாதபடி இனிப் பாவம் செய்யாதே என்றார். குணமாக்கப்பட்டவன் சொன்ன சாட்சி தான் தியானவசனம்.

நாம் பல நேரங்களில் மனிதனை விட சட்டங்களுக்கும், பாரம்பரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். மனிதனை மதிக்கத் தவறுகின்றோம். மனிதனுக்கு உதவி செய்யத் தவறுகின்றோம். இறைவனிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளை எத்தனை பேருக்கு அறிவித்திருக்கிறோம்? நாம் எதற்காக இறைவனை தேடி அலைகிறோமோ, ஆண்டவர் இயேசு அதை நமக்கு தருகிறார். இதற்காகவே இயேசு நமக்காக சிலுவையிலே பாடுபட்டு மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். பாவத்திலிருந்து விடுதலையை தந்தார். எல்லா பிரச்சனைகளுக்கும் நோய்களுக்கும் காரணமான பாவத்தை நம் ஆண்டவர் சிலுவையில் சுமந்து தீர்த்திருக்கிறார். நாமும் அதிக கேடானவை நம்மை ஆட்கொள்ளாதபடி பாவத்துக்கு விலகி வாழ்வோம்.

மனதுருக்கமுள்ள இறைவனே! இயேசுவில் எங்கள் பாவங்களுக்கு பரிகாரம் காண கிருபை செய்திருக்கிறீர். இயேசுவில் வைக்கிற விசுவாசத்தில் நாங்கள் நிலைத்திருந்து பாவத்திற்கு விலகி வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.