மாற்கு 5 : 24-36 06 அக்டோபர் 2020, செவ்வாய்
“மகளே உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கினது. சமாதானத்தோடே போய், உன் பாடு நீங்கிச் சுகமாயிரு.” – மார்க்கு 5 : 34
பன்னிரெண்டு ஆண்டுகள் இரத்தப் போக்கினால் அவதியுற்ற ஒரு பெண் இயேசுவால் சுகம் பெற்றாள் என்பதை இந்த தியானத்தில் தியானிப்போம்.
யூத சட்டத்தின்படி பெண்கள் இரத்தப் போக்குள்ள நாட்களில் எதையும் தொடக்கூடாது. அவர்கள் தொடுகிற பொருட்கள் எல்லாம் தீட்டாகும் என்று யூதர்கள் நம்பினர். அவர்கள் படுக்கை, அவர்கள் அமரும் இருக்கை எல்லாம் தீட்டாகக் கருதப்பட்டது. அவர்கள் தொட்ட பொருட்களை யாராவது தொட்டாலும், அவர்களும் தீட்டானவர்களாக கருதப்பட்டார்கள். அவர்கள் வெளியே வரவோ அல்லது எவரையும் அல்லது எதையும் தொடவோ கூடாது என்ற சட்டம் கடுமையாக இருந்தது. நோயின் கொடுமையினால் அவதியுற்ற அப் பெண் பல மருத்துவர்களை சந்தித்தாள். நலமாவதற்காக தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தாள். ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டாள். இயேசுவை சந்திக்க தனது வீட்டைவிட்டு துணிச்சலோடு புறப்பட்டாள். இயேசுவின் ஆடையைத் தொட்டால் சுகம் கிடைக்கும் என்று நம்பினாள். இயேசுவை சுற்றி நின்ற மக்களைத் தாண்டி இயேசுவின் ஆடையைத் தொட்டாள். அது அவளுடைய அசைக்க முடியாத விசுவாசத்தைக் காட்டுகிறது.
தீர்க்கதரிசி மோசே காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த யூத சட்டத்தை அவள் துணிவுடன் புறக்கணித்தாள். எந்த யூதப் பெண்ணும் செய்யாததை இவள் செய்தாள். இந்தப் பெண் இயேசுவிடம் சுகப்படுத்த விண்ணப்பம் செய்யவில்லை. விசுவாசத்தோடு வந்தாள். ஆடையின் ஓரத்தை மட்டும் தொட்டாள். விசுவாசத்தின்படி சுகமானாள். இயேசுவிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது. இதை அறிந்த இயேசு என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். அப்பெண் இயேசுவின் முன்னே வந்து இயேசுவின் பாதத்தில் விழுந்து தனக்கு நேரிட்டதை சாட்சியாகக் கூறினாள். அப்போது ஆண்டவர் அவளுக்கு உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது. சமாதானத்தோடு போய் உன் பாடு நீங்கி சுகமாய் இரு என்றார்.
அவளுக்கு ஆண்டவர் அருளிய முதல் ஆசீர்வாதம் இரட்சிப்பு. இரண்டாவது ஆசீர்வாதம் சமாதானம். மூன்றாவது ஆசீர்வாதம் வேதனை நீக்கப்பட்டது. நாம் பெலவீனப்படும் போதும், நம் நோயின் வேதனை நீண்டு கொண்டு போகும் போதும் பல வேளைகளில் நம்பிக்கை இழந்து போகிறோம். சோர்ந்து போகிறோம். இயேசு நம்மைப் போல இம்மண்ணில் பிறந்து வாழ்ந்தவர் நம்முடைய வேதனை, நோய் எல்லாம் அறிந்தவர். இந்த நம்பிக்கையில் அவரிடம் வருவோம். அவர் சுகம் தருவார்.
யெகோவா ரஃபா, சுகம் தருபவரே! சமாதானமில்லாமல், பாடுகளோடு வாழ்கிற எங்களுக்கு சமாதானம் தாரும், சுகம் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
