ஒசேயா 14 : 1-9 18 செப்டெம்பர் 2020, வெள்ளி
“இஸ்ரவேலே, உன் கடவுளாகிய கர்த்தரிடம் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.” – ஒசேயா 14 : 1
இறைவனின் அன்பு மாறாதது, அளவிட முடியாதது. அறிவுக்கு எட்டாதது. பல நேரங்களில் மனிதன் இறைவனை விட்டு தூரமாய் போகிறான். ஆனாலும் இறைவன் மனிதர் மேல் அன்பு கூறுகின்றார். மனிதர்கள் நித்திய வேதனை தரும் நரக வாழ்க்கைக்கு சென்றுவிடக்கூடாது என்று விரும்புகின்றார். இறைவனின் செட்டைகளின் நிழலிலே அடைக்கலம் புகுந்து பாதுகாப்போடு வாழவேண்டும் என்று விரும்புகின்றார். அவன் நித்திய மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றார்.
தியானபகுதியில் இறைவனின் அன்பு உள்ளத்தை நமக்குச் சொல்லுகிறார் ஒசோயா தீர்க்கதரிசி. ஒசேயா தீர்க்கர் ஆமோஸ் தீர்க்கருக்கு சற்று பின்னர் வாழ்ந்தவர். கி.மு. 722-ல் சமாரியா வீழ்ச்சியுற்ற சமயத்தில் இறைவாக்கு உரைத்தார். கோமேர் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவள் ஒசேயாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தாள். அவரை விட்டு விலகிச் சென்றாள். அந்த பெண்ணோடு கொண்டிருந்த மண உறவை பின்னணியாகக் கொண்டு ஒசேயா தீர்க்க தரிசனம் உரைத்தார். இறைமக்களாய் இருந்த இஸ்ரவேலர்கள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கவில்லை. விக்கிரக ஆராதனை செய்தார்கள். இறைவனுக்கு எதிராக துரோகம் செய்தார்கள். பிற சமூகத்தவர்களோடு தவறான மணஉறவுகளை வைத்திருந்தனர். பாகால் வழிபாட்டை இறை வழிபாட்டோடு இணைத்துக் கொண்டனர். ஒசேயா தீர்க்கதரிசி சமூக மாற்றத்தை வலியுறுத்தினார். இஸ்ரவேல் மக்களை இறைவனாகிய கர்த்தரிடம் திரும்ப அழைத்தார். அக்கிரமத்தில் விழுந்து, இறைவனை விட்டு விலகிச் சென்றால் இறைவனின் தண்டனை உண்டு என்று எச்சரித்தார். இறைவனின் அன்பு இறுதிவரை நிலைத்திருக்கும். அதனால் மக்களை தம் பக்கம் சேர்த்துக் கொள்ளுவார். அதன் மூலம் முறிந்த உறவு மலரும் என்கிறார் தீர்க்கர்.
தனக்கு உண்மையாயிராமல் துரோகம் செய்த மனைவியை தேடிச் சென்றார் ஒசேயா. நாம் உண்மையற்றவர்களாக இருந்தாலும் நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர். இறைவனை விட்டு விலகிப்போன நம்மையும் கடவுள் இயேசுவில் தேடி வருகிறார். இன்று நாம் அதிகாரம் பதவி, பணம், சிற்றின்பம் போன்றவற்றின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். இவற்றில் நமக்கு நிம்மதி கிடைப்பதில்லை. இறைவனின் இடத்தை பிற காரியங்கள் ஆக்கிரமிக்கக் கூடாது. இயேசு நம்மை நேசிக்கிறார். அவருக்கு உண்மையாயிருப்போம். நமக்காக தன் ஜீவனையே தந்தவர். கல்வாரி மேட்டிலே, சிலுவையிலே பலியானவர், நம்மை மீட்டுக்கொண்டவர் இறைமைந்தன் இயேசுகிறிஸ்து. அவருக்கு உயிருள்ள சாட்சிகளாவோம்.
மனம் திரும்பும் போது எங்களை மன்னிக்கிற கடவுளே! நெருங்கி வரும் பாவங்களிலிருந்து விலகி உமது எச்சரிப்பின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
