எசேக்கியேல் 2 : 1-10 17 செப்டெம்பர் 2020, வியாழன்
“அவர்கள் கேட்டாலும், கேளாவிட்டாலும், நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்.” – எசேக்கியேல் 2 : 7
திருமறை வரலாற்றில் பெரிய தீர்க்கதரிசிகள் மூவர் ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோர். எசேக்கியேல் தீர்க்கராகவும், ஆசாரியராகவும் இருந்தார். எசேக்கியேல் என்பதன் பொருள் `கர்த்தர் பலப்படுத்துகிறார்’. ஆசாரிய வகுப்பைச் சார்ந்த பூசி என்னும் ஆசாரியரின் மகன் கி.மு. 597-ல் நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்கு சிறைபிடித்துக் கொண்டு போனவர்களில் இவரும் ஒருவர்.
இஸ்ரவேலர் இறைவன் தெரிந்தெடுத்த மக்கள். இஸ்ரவேலர்கள் சிறைப்பட்டிருக்கிற சூழ்நிலையில் இந்த வார்த்தை அவர்களுக்குச் சொல்லப்பட்டது. தீர்க்கதரிசி தரிசனம் காண்கிறவர். இறைவனோடு வாழ்ந்தவர். இறை வார்த்தைகளைச் சொல்லி மக்களை எச்சரித்தவர். இந்த எச்சரிப்பு செழிப்பான அல்லது வசனிப்பான வார்த்தைகள் அல்ல. இறைவன் சொல்வதைச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்கள் முகத்தைக் கண்டு திகில் கொள்ளவும் வேண்டாம். என் எச்சரிப்பை சொல் என்றார் இறைவன்.
இறைவன் இஸ்ரவேலர்களை உயர்வாகவே வைத்திருந்தார். அவர்களுடைய பொறுப்பும் அதிகமாகவே இருந்தது. இஸ்ரவேலர்கள் இறைவனுக்கு முன்பாக செம்மையாக நடக்கவில்லை. பரிசுத்த இடம் தீட்டுப்பட்டு போயிற்று. சீர்கெட்டு நடந்தார்கள், விக்கிரக வணக்கம் செய்தனர். இரகசியப் பாவம் செய்தனர். மூடநம்பிக்கை, சூரிய வணக்கமும் இருந்தது. தங்கள் தவறையும் பாவச் செயல்களையும் உணராதவர்களாகவும் இருந்தார்கள். எனவே தான் எசேக்கியேல் மூலமாக இறைவன் பேசினார்.
இன்றைக்கும் அநேக ஊழியங்கள் மனிதரை பிரியபடுத்தும் வார்த்தைகள், செழிப்பான வார்த்தைகள் தங்கள் சொந்த வார்த்தைகளைக் கொண்டு எச்சரிக்கின்றார்கள். தங்கள் மனதில் தோன்றியபடியெல்லாம் பேசுகிறார்கள். இயேசுவின் நாமத்தினால் எச்சரிக்க வேண்டும். காரணம் மக்கள் மனம் திரும்ப வேண்டும். இறை உறவில் வாழ வேண்டும். பாவத்தை சொல்லி எச்சரிக்கிற ஊழியன் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. செழிப்பான வாழ்வை குறித்துச் சொல்லும் ஊழியன் ஏற்றுக் கொள்ளப்படுகிறான். ஆலோசனை இல்லாத இடங்களில் மக்கள் சீர்கெட்டுப் போவார்கள் என்பது எத்தனை உண்மை. மோசம் போக வேண்டாம். ஆண்டவர் தம்மை பரிகாசம் பண்ணவொட்டார்.
ஜீவனுள்ள இறைவா, உம் வசனத்தால் எங்களை உம்மண்டைக்கு அழைத்திருக்கிறீர். நியாயப் பிரமாணத்தால் பாவங்களை உணரவும் நற்செய்தியால் புதுவாழ்வு பெறவும் வழிநடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
